இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார். இது பற்றி பிரீத்தி ஜிந்தா, ’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.
அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன். தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.
அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள். பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும். நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.