01 ஏப்ரல் 2009
நீங்கள் யார்...? முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?
ஏப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம்.
இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்?
ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்!
அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா?
அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே.
முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள்.
புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா?
இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம்.
இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது.
இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது.
புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம்.
ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை.
கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர்.
ரஜினி அப்படியா? இல்லவே இல்லை.
அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது.
கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா?
கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள்.
ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி.
ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே கெட்டிக்காரராகவே இருக்கிறார்.
தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள்.
தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி.
அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன்.
நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?