07 மார்ச் 2009
சச்சின், கங்குலியை கடத்த திட்டமிட்டவர்களுக்கு பொடா விசாரணை
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் மீது பொடா மற்றும் வெடிகுண்டுகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளது.
கடந்த 2002ல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சினையும், அப்போதைய கேப்டன் கங்குலியையும் கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் 6 ஹிஜிபுல் முகாஜிதீன் தீவிரவாதிகளை கைது செய்தனர். தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அதில் அர்ஷத்கான் என்ற தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில்,
சிறையில் இருக்கும் ஹிஜிபுல் முகாஜிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவரான நஸ்ருல்லா லாங்ரியால் மற்றும் சில மூத்த உறுப்பினர்களை காப்பாற்ற நினைத்தோம். சச்சின், கங்குலி ஆகியோர்களை கடத்தி பணயக் கைதிகளாக வைத்து கொண்டு, அவர்களை விடுவிக்க திட்டமிட்டோம். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தையும் தகர்க்க திட்டமிட்டோம் என்றார்.
இதையடுத்து அவர்கள் மீதான வழக்கு பொடா சட்டம் மற்றும் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 13ம் தேதி நடக்கிறது.