நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களை தாண்டி விட்டார். ஐதராபாத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கிசுகிசுக்களில் அதிகம் சிக்குகிறீர்களே?
நான் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை காயப்படுத்தின. இப்போது பக்குவப்பட்டு விட்டேன்.
வேலையற்றவர்கள் தான் கிசு கிசுக்களை பரப்பி வீண் வேலையில் ஈடுபடுகிறார்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே அதை பொருட்டாக நினைப்பதில்லை.
நான் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறேன். அதுவும் இது போன்ற கிசுகிசுக்களுக்கு காரணமாக இருக்கலாம்.
நீங்க அதிர்ஷ்டக்காரியா?
அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தமிழ் படங்களில் பிசியாக நடிக்கிறேன். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கிறேன்.
கிளாமரில் ஏன் இத்தனை தாராளமயமாக்கல்?
இது கிளாமர் உலகம். சினிமா தொழில் என்பதும் கிளாமர்தான். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கட்டுப்பாடு என்னிடம் இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், என் கேரக்டர் போன்றவற்றை பார்த்து படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறேன்.
கதைகளில் ஹீரோக்களுக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
உண்மைதான். கதாநாயகர்களுக்குதான் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. அதுமாதிரி கதைகளைத்தான் படமாக்குகிறார்கள்.
பாடுவது ஆடுவது மட்டுமே இருக்கும் கேரக்டர்களை நான் ஏற்பது இல்லை.
எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பும் முக்கியத்துவமும் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடனும் மலையாளத்தில் பாடிகாட் படத்திலும் நடிக்கிறேன். ஏற்கனவே நான் நடித்த டொவன்டி டொவன்டி மலையாள படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக அப்படத்தை எடுத்தனர். அந்த படம் வெற்றி பெற்றது சந்தோஷம்.
என்ன சாதித்துவிட்டீர்கள்?
அப்படி வருத்தம் எனக்கு இருக்கு. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என்ற பெயர் வாங்கி இருக்கிறேன். அது நல்ல விஷயம்.