நாட்டின் கடன்சுமை வரம்பை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் கடன் சுமை வரம்பை உயர்த்த ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒருவாரகாலமாக குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த ஒபாமா அரசு எடுத்த நடவடிக்கை தோல்வியையே தழுவியது. இதையடுத்துதான் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் அதிபர் ஒபாமா. இதுதொடர்பாக அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை வருமாறு: அமெரிக்காவுக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நிறைய பொறுப்புகளும், கடமைகளும் உள்ளன. எந்த ஒரு சூழலிலும் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நாடு உள்ளது. நாடு இதுவரை எப்பொழுதும் சந்தித்திராத நிதி சிக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும் இதனால் நாம் மனம் தளர்ந்திடக்கூடாது. நாட்டின் நலன் கருதியும், நிதி சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கிலும் சில நிதி சீர்த்திருத்தங்களை அரசு செய்து வருகிறது. இவற்றில் ஒன்று தான் கடன்சுமை வரம்பை உயர்த்தும் அரசின் முடிவு. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கல் நீடிப்பதால் நிதி திரட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் அனைத்துவிதமான சமூக, பொருளாதாரத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. நாட்டின் இப்போதைய நிதிச் சூழலில் கடன்சுமை வரம்பை உயர்த்தாமல் எதுவுமே செய்ய முடியாது. இதுகுறித்து குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். கடன்சுமை வரம்பு உயர்வு கூடாது, அதுதொடர்பான மசோதாவை எதிர்ப்போம் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளனர். நாடு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குகூட நிதியை ஒதுக்க இயலாது. இதுபோன்ற நிலையால் அந்நிய முதலீட்டாளர்கள்கூட அமெரிக்காவில் முதலீடு செய்ய யோசிக்கும் நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலைவந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதையெல்லாம் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். அவர்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள நெருக்குதல் அளிக்க வேண்டும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இதை உங்களால் செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அதிபர் ஒபாமா. |