சென்ற வாரத்தில் தேடல் இயந்திர நிறுவனமான யாஹூ, பயனீட்டாளர்களின் தேடல் விவரங்களைப் பல மாதங்களுக்குச் சேகரித்துவைக்கும் என்ற தகவல்,பிரைவசி வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கியது. இந்த வாரத்தில், அலைபேசி உலகின் இரண்டு முக்கியப் பிதாமகர்களின் மீது பிரைவசி பற்றிய படு பயங்கர குற்றச்சாட்டு. ஆப்பிளின் ஐ-போன் அல்லது கூகுளின் ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வாரத்தில் இவை இரண்டைப் பற்றியும் வெளிவந்த பிரைவசி அமளி தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.தெரியாதவர்களுக்கு, முதலில் சில அடிப்படைகள்...
அலைபேசி என்பது தொலைபேசியாக மட்டுமே பயன்பட்ட காலம் ஒன்று உண்டு. யாருடனாவது பேச வேண்டுமானால், தொலைபேசி இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும் என்பது தேவை இல்லாமல், நீங்கள் செல்லும் இடமெல்லாம் 'செல்’உங்களுடன் வந்தது. இது மக்கள் தொடர்பில் மிகப் பெரியமாற்றத்தைக் கொண்டுவந்தது.சத்தத்தைப் பரிமாறிக்கொள்ளும் இந்த ஊடகத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுத்துக்களையும் எளிதாக அனுப்பலாம் என்ற சாத்தியக்கூறு வந்ததும், குறுஞ்செய்தி என்ற தொழில்நுட்பம் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வந்த ஸ்மார்ட் போன் வகையறா,இந்தத் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம். இது அலைபேசியைக் கணினிக்கு நிகரான தாக மாற்றியது.தொலைத்தொடர்புக்கு மட்டுமல்லாமல்,மென்பொருள்கூறுகளைப் பதிந்துகொண்டு பயன்படுத்த முடிகிறது. புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து,சில நொடிகளுக்குள் அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இடம் சார்ந்த சேவைக் கூறுகளின் (Location Services) உதவியால், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ,அந்த இடம் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. இதற்கு ஓர் எளிய உதாரணம்: கூகுள் மேப்ஸ் ( maps.google.com) போன்ற வழிகாட்டுச் சேவைகள். உதாரணத்துக்கு: மதுரை-சென்னைக்குப் போய்வந்தபடியே இருக்கும் கார்த்திக் நாகராஜனை எடுத்துக்கொள்ளலாம்.எப்போதும் நவீன அலைபேசிகளைப் பயன்படுத்தும் கார்த்திக், சென்னையில் குறிப்பிட்ட ஓர் இடத்துக்குச் செல்வதற்காகத் தனது ஸ்மார்ட் போனில், வழிகாட்டு சேவை ஒன்றுக்குச் சென்று, செல்ல வேண்டிய இடத்தைக் கொடுக்க, அவருக்குத் தெளிவான பயணப் பாதையைக் காட்டுகிறது. அவர் அந்தப் பாதையில் செல்லும் போது அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.
ஸ்மார்ட் போன்களில் இருக்கும் GPS (Global Positioning System) எனப்படும் இடம்காணும் தொழில்நுட்பம்தான் இதற்கு அடிப்படை. செயற்கைக்கோள்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னலை ஆதாரமாகக்கொண்டு, உங்களது அலைபேசி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை உங்களுக்குச் சொல்ல முடிகிறது.
இந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இடம் சார்ந்த சேவைகளைப்பற்றி அவ்வப்போது எழுதியது நினைவிருக்கலாம். Foursquare, Gowalla, Loopt போன்ற அலைபேசி மென்பொருள் நிறுவனங்களின் வெற்றியைப் பார்த்துவிட்டு, ஃபேஸ்புக் Facebook Places (http://www.facebook.places/) என்ற பெயரிலும், கூகுள் லேட்டிடூயுட் (http://www.google.com/mobile/latitude ) என்ற பெயரிலும் இடம் சார்ந்த சேவைகளை வெளியிட்டன. இந்தச் சேவைகளின் அடிப்படைத் தேவை நிறிஷி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்!
பிரச்னைக்கு வருகிறேன்.
பீட் வார்டன், ஆலஸ்டெய்ர் ஆலன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஐ-போன் சாதனத்தின் குறிப்பிட்ட கோப்பு ஒன்றில்,தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் ஐ-போன் எப்போதெல்லாம் கணினியுடன் இணைக்கப்படுகிறதோ,அப்போதெல்லாம் இந்தக் கோப்பு கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளுக்குள் சேமிக்கப்படுவதையும் பார்த்து, இந்தக் கோப்பில் என்னதான் இருக்கிறது என்பதைத் தோண்டித் துருவிப் பார்க்க, கிடைத்த தகவல் திகைப்பூட்டியது. ஐ-போன் பயனீட்டாளர் சென்ற இடங்களின் GPS தகவல்கள் அந்தக் கோப்பில் பதிவு செய்யப்படுவதைச் சென்ற வாரம் நடந்த டெக் மாநாடு ஒன்றில் தெரிவிக்க, டெக் உலகின் கவனத்தை ஈர்த்தது இந்தப் பிரச்னை. (அவர்களது பேச்சைக் கேட்க, இந்த உரலிக்குச் செல்லவும்http://www.youtube.com/watch?v=GynEFV4hsA0&feature=player_embedded). உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளில் உள்ள தகவல்கள் ஆப்பிளால் நுகர முடிகிற சாத்தியக் கூறு இருப்பதால், பயனீட்டாளர்களை அவர்களுக்குத் தெரியா மல் வேவு பார்க்கத்தான் இது பயன்படப்போகிறது என்ற பயத்தை பிரைவசி காவலர்கள் கிளப்ப, உடல் நலக் குறைவால் விடுமுறையில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸே அலுவலகம் வந்துமீடியா வுக்குச் சமாதானம் சொல்ல வேண்டிய நிலை.''நாங்கள் அப்படியெல்லாம் எந்தத் தீய நோக்கத்துடனும் இதைச் செய்ய வில்லை. செயற்கைக்கோள்களில் இருந்து வரும் சிக்னலை மட்டுமே எடுத்து இடம் சார்ந்த சேவைக்குப் பயன்படுத்தினால், அதிக நேரம் எடுக்கிறது. அதனால், ஐ-போன் செல்லும் இடங்களில் உள்ள இணைய இணைப்புகள் ( WiFi ) போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து, இந்தக் கோப்பில் சேர்த்தோம். இதை ஆப்பிளின் உபயோகத்துக்காக எடுக்கும்போது, பயனீட்டாளர்பற்றிய விவரங்கள் அதில் இருக்காது. எனவே, பிரைவசி விதிகளை மீறினோம் என்று சொல்வது தவறு!'' என்று நீளமான விளக்கம் கொடுத்தாலும், டெக் உலகின் டென்ஷன் முழுவதும் குறைந்ததாகத் தெரியவில்லை.(ஆப்பிளின்நீண்ட விளக்கத்தைத் தெரிந்துகொள்ள,இந்த உரலியைச் சொடுக்கவும் http://finance.yahoo.com/news/Apple-QA-on-Location-bw-3919607983.html?x=0)
ஆப்பிள் செய்தி வெளியானவுடன்,உடனடிக் கேள்வி எழுந்தது கூகுள் பற்றி! கூகுளின் ஆண்ட்ராயிட் மொபைல் இயக்க மென்பொருள் இடம் சார்ந்த சேவைகளைக் கொடுக்க, இது போலவே பயனீட்டாளர்கள் சென்ற இடங் களை எல்லாம் சேமிக்கிறதா? ''ஆம், நாங்கள் இதைச் சேமிக்கிறோம். ஆனால், ஆப்பிள்போல் அல்லாது, பயனீட்டாளரிடம் வெளிப்படையாக அனுமதி பெற்றே (!) இதைச் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், ஆப்பிள் iTunes போல கணினியில் இந்தக் கோப்பைச் சேமித்து எடுத்துக்கொள்வது இல்லை!'' என்று,' அவன்தான் என்னைவிட மோசம்’ என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறது கூகுள்!
நன்றி - விகடன்