போர்ச்சுகலில் கடந்த 2007ம் ஆண்டு கடத்தப்பட்ட 4 வயது பெண் குழந்தை இந்தியாவின் காஷ்மீரில் வளர்வது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த கதே-ஜெர்ரி தம்பதியின் பெண் குழந்தை மெடலீன் மெக்கான். குழந்தையின் 4வது பிறந்த நாளை கொண்டாட அனைவரும் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் போர்ச்சுகலில் உள்ள பிரயா டா லஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மெடலீன் திடீரென காணாமல் போனாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியை நாடினர். அவர்கள் தொடர்ந்து குழந்தையை தேடி வந்தனர். இதற்கிடையில் காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு பிரிட்டனை சேர்ந்த சிலர் சமீபத்தில் சுற்றுலா சென்றனர். அப்போது மெடலீன் போலவே ஒரு குழந்தையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண் தைரியமாக லே பொலிசில் தெரிவித்திருக்கிறார். இப்போது அந்த குழந்தைக்கு 8 வயதிருக்கும். லே பொலிசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று தனியார் புலனாய்வு ஏஜென்சியினர் கூறுகின்றனர். பிரான்சை சேர்ந்த பெண்ணும், பெல்ஜியத்தை சேர்ந்த அவரது கணவரிடம் அந்த குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை எங்களுடையதுÕ என்று இருவரும் கூறுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து லே பொலிசார் கூறுகையில்,"குழந்தையை டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்மை தெரியவரும். இந்த பிரச்சனை குறித்து பிரிட்டன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்" என்றனர். குழந்தை மெடலீன் காணாமல் போனது எப்படி? என்பது குறித்து சமீபத்தில் தான் அவளது பெற்றோர் புத்தகம் ஒன்று வெளியிட்டிருந்தனர். கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க ஸ்காட்லாந்து பொலிசாருக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிட்டுள்ளார். |