26 செப்டம்பர் 2009
சினேகாவால் அடிவாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்!
சினேகாவைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சிக்கு வந்த நடிகை சினேகாவை பார்க்க தனது மனைவி விரும்பியதால், சாலையோரம் வண்டியை நிறுத்தி சினேகாவைப் பார்க்கப் போய், சினேகா கலந்து கொண்ட நகைக் கடை பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர்.
திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடையின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சினோகாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா.
இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர்.
அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில்,
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக.
நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி யில் பரபரப்பு ஏற்பட்டது.