19 ஜூன் 2009
அப்ரிதி அதிரடி ஆட்டத்தால் சுருண்டது தெ. ஆ. - இறுதிப் போட்டியில் பாக்.
நாட்டிங்காம்: டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் படு ஸ்டைலாக கைப்பற்றியது.
நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் நேற்று முதல் அரை இறுதி ஆட்டம் நாட்டிங்காமில் நடந்தது.
இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது என்று கருதப்பட்ட பாகிஸ்தானும் மோதின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் படு கலக்கலாக ஆடி தென் ஆப்பிரிக்காவை துரத்தி விட்டது.
ஷாஹித் அப்ரிதி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்ல முடிந்தது.
முதலில், பேட்டிங்கில் 34 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அபிர்தி, பின்னர் பந்து வீச்சின்போது, 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்து தான் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார்.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
கம்ரன் அக்மல் 23 ரன்களும், சோயப் மாலிக் 34, யூனிஸ்கான் 24 எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்காவால், பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால், 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கேப்டன் ஸ்மித் வெறும் 10 ரன்களுடன் அவுட் ஆனார். ஆனால் ஆல் ரவுண்டர் கல்லிஸ் சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். இவர் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய ஸ்கோரை எட்டியவர்.
டுமினி தன் பங்குக்கு 44 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல நடையைக் கட்டினர். இதனால் 142 ரன்களில் ஆட்டத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா.
இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது பாக்.
கடந்த முறை அது இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் 2வது முறையாக முன்னேறியுள்ள பாக். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுருக்கமான ஸ்கோர்..
பாக்.
கம்ரன் அக்மல் - 23, அப்ரிதி -51, சோயப் மாலிக் - 34, யூனிஸ்கான் -24 (149-4).
தென் ஆப்பிரிக்கா
கல்லிஸ் - 64, டுமினி -44, ஸ்மித் - 10.
இன்று இலங்கை - வெஸ்ட் இன்டீஸ் மோதல்
இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன.