16 ஜூன் 2009
அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?
தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை இன்னும் ஆறுமாதம் கழித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நடிகர் விஜய்.
விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்கள் அனைவரையும் கூட்டி தனி மாநாடு நடத்தவும், அன்றே புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும்.
உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்குக் காரணம், இப்போதைய அரசியல் சூழல் நடிகர்களுக்குச் சாதகமாக இல்லாமலிருப்பதும், விஜய்யால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத நிலையும்தான் என்று கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் ரசிகர்களில் பலருக்கும், புதுக் கட்சிக்கு தலைவராக எஸ் ஏ சந்திரசேகரனை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லையாம்.
மாவட்ட அளவில் பொறுப்புகளைப் பெறுவதில் சிலர் கடுமையாக மோதிக் கொண்டாலும், சென்னை போன்ற பகுதிகளில் அரசியல் கட்சிக்கு கைக்காசை செலவழிக்க யாருமே தயாராக இல்லையாம்.
இதையெல்லாம் சரிப்படுத்தி, 6 மாதங்களுக்குப் பின்னர், விஜய் வெற்றிப் படம் கொடுத்த பிறகு கட்சி பற்றி தீவுத் திடலில் கூட்டம் கூட்டி அறிவிக்கப் போவதாக நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன்.