
21 மே 2009
'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விடுதலை!
பொது நிகழ்ச்சியில் பேண்ட் ஜிப்பை அவிழ்த்த குற்றத்துக்காக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நேற்று கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த லேக்மே பேஷன் ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது பேண்ட் ஜிப்பை, அனைவரது முன்னிலையிலும் அவரது மனைவி டுவிங்கிள் கழற்றி விட்டார்.
நிகழ்ச்சியை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, அனில் நாயர் என்பவர் தான் சார்ந்த பொது நல சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுத்தார். வகோலா போலீசார் அக்ஷய் குமார் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் அக்ஷய். நேற்றுதான் விமானம் மூலம் மும்பை வந்தார். வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது வக்கீலுடன் சென்று போலீசிடம் சரண் அடைந்தார்.
உடனே அவரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விட்டனர். அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிளும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டார்.
