19 மே 2009
அசல் பாட்டும் 'அவுட்'?
விஜய்யின் வேட்டைக்காரனைத் தொடர்ந்து அஜீத்தின் அசல் படப் பாட்டும் லீக்காகி இணையத்தில் விட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
முன்பு சிவாஜி , சமீபத்தில் எந்திரன் போன்ற படங்களின் காட்சிகளை சிலர் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டனர். அது தவறுதான் என்றாலும், ரஜினி படம் என்பதால் ஏற்படும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் தொடர்ந்து இதுபோன்ற ஆர்வக் கோளாறில் சிலர் இறங்கிவிடுகின்றனர். இதை வைத்து கணிசமாகக் காசு பார்த்தவர்களும் உண்டு.
இப்படி ஆடியோ-வீடியோ இணையத்தில் வெளியாவதால் ஏற்படும் பரபரப்பு ப்ளஸ் பப்ளிசிட்டியைப் பார்த்த சிலர், தாங்களே அதுபோன்ற வேலைகளில் இறங்கியதும் உண்டு.
சிம்புவின் சிலம்பாட்டம் லீக் ஆகிவிட்டது, விஜய்யின் வில்லு காட்சிகள் கசிந்துவிட்டன, விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு அவுட்... என்றெல்லாம் வந்த செய்திகளின் பின்னணி பற்றி ஆராய்ச்சி செய்தால், நிறைய சுவாரஸ்யமான கதைகள் வெளிவரக்கூடும்!
சில தினங்களுக்கு முன் விஜய்யின் வேட்டைக்காரன் அறிமுகப் பாட்டு என்ற பெயரில் ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. ஆனால் அதுபற்றி, கூறிய தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியன் 'அது ஒரிஜினல் பாடல் இல்லை' என்று கூறிவிட்டார்.
இப்போது அஜீத்தின் அசல் பாடலும் இணையத்தில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல் வரிகளைக் கூட வெளியிட்டுள்ளனர் இணையதளங்களில்.
இதுகுறித்து படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபுவிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:
"இதெல்லாம் சும்மா. இன்னும் படத்துக்கு பாடல்பதிவே நடக்கவில்லை. படத்துக்கான பாடல்களை எழுதுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. அனைத்தும் பாடல்களையும் எழுதுபவர் அவர். வெறும் 12 வரிகளை அசல் பாடல் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நம்ப வேண்டாம். பரபரப்புக்கா சிலர் ஏதாவது செய்திகளைக் கிளப்பிவிடுகின்றனர்" என்றார்.