ஒருவரை மனமாரப் பாராட்டும் மனசு எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத நிலையில்தான் சக மனிதனை உண்மையாக, முழு மனதுடன் பாராட்ட மனசு வரும்.
ரஜினி அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர். நூறு சதவிகிதம் யதார்த்தமான கலைஞர். நல்ல படைப்புகளை முழுமையாய் உள்வாங்கி ரசிக்கத் தெரிந்த வெகு அரிதான மனிதர்களில் ஒருவர்.
நான் கடவுள் படம் பார்த்துவிட்டு ரஜினி பாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று போதும், ரஜினியின் மனது எப்படிப்பட்டது என உலகுக்குச் சொல்ல.
ஒரு கட்டத்தில் இப்படிச் சொல்கிறார்:
‘பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்!!’
இந்தியத் திரையுலகே பார்த்து பிரமித்து தலைவணங்கும் ஒரு உச்ச கலைஞன், தன் சக கலைஞனின் திறமைக்கு தரும் அங்கீகாரம் இது.
பாலா… உங்களைப் போன்ற உன்னதப் படைப்பாளிகளுக்கு இந்த மாதிரி நல்லவர்களின் பாராட்டே பல ஆஸ்கர்களுக்கும் தேசிய விருதுகளுக்கும் சமம்!!
பாலாவுக்கு ரஜினி எழுதிய கடிதம்:
“திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை. பொதுவாக அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அன்றாட அரசியல் வாழ்க்கை பற்றித்தான் தெரியும்.
ஆனால் இந்த உலகில், இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாத எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கு. இதில் Underworld Mafia-க்களிடம் சிக்கித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு வாழ்க்கைகளையும் யதார்த்தமாக திரையில் கொண்டு வந்திருக்கும் பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.
இமய மலையில் பல அகோரிகளை நேரில் சந்தித்தவன் என்ற முறையில் ஆர்யா அவர்களின் யதார்த்தமான அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்ன மெய்சிலிர்க்க வைத்தது. படத்தில் நடித்த அனைத்து ஊனமுற்றவர்களின் நடிப்பும் என்னை கண்கலங்க வைத்தது. இந்த மாதிரி ஒரு திரைக்காவியம் தமிழிழ் வந்தது என் தலையை நிமிர வைத்திருக்கிறது. இனிமேல் ஒரு படம் இதுபோல் வரப்போவதுமில்லை.
இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் ரஜினிகாந்த்”