11 பிப்ரவரி 2009
கேப்டன் பொறுப்பை உதறுகிறார் ஜெயவர்தனே
இலங்கை அணித் தலைவர் மகேலா ஜெயவர்தனே வரும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்குப் பிறகு அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 1- 4 என்று படு தோல்வியடைந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது ராஜினாமா முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி துலிப் மென்டிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் புதிய அணித் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் சேர்க்கப்படாத ஜெயவர்தனே இன்று காலை அணித் தேர்வாளர்களை அழைத்து தனது இந்த முடிவை அறிவித்தார்.
சில நாட்களாகவே இது குறித்து தான் யோசித்து வந்ததாகவும், தற்போது 2011 உலகக் கோப்பைக்கு இன்னமும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் புதிய அணித் தலைவருக்கு இலங்கை அணியை உலகக் கோப்பைக்கு தயார் செய்ய போதிய அவகாசம் உள்ளது என்று தான் கருதுவதாக ஜெயவர்தனே தெரிவித்தார்.
இவருக்கு பிறகு குமார் சங்கக்காரா கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
2004ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவராக பொறுப்பேற்ற மகேலா ஜெயவர்தனே, பிறகு 2006ஆம் ஆண்டு டெஸ்ட் அணித் தலைவர் மர்வான் அட்டப்பட்டு காயமடைந்திருந்ததால் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பில் தேர்வு செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை இலங்கை நுழனிந்தது இவரது அணித் தலமையின் கீழ் நிகழ்ந்த குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.
இவரது தலைமையின் கீழ் வெளி நாடுகளில் இலங்கையின் ஆட்டம் மேம்பாடு அடைந்தது. இவர் தலைமையில் இங்கிலாந்து, நியூஸீலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய தொடர்களை சமன் செய்தது. மொத்தம் 26ப் டெஸ்ட் போட்டிகள் தலைமை வகித்த ஜெயவர்தனே அதில் 15 போட்டிகளை வென்றுள்ளார். 7 போட்டிகளைத் தோற்றுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளிலும் ஜெயவர்தனே தலைமையின் கீழ் 94 போட்டிகளில் 54 போட்டிகளை இலங்கை வென்றுள்ளது. 35 போட்டிகளை தோற்றுள்ளது.
இவரது தலைமையில்தான் கடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்றது.