இயக்குநர்கள் நடிகர்களாகிறார்கள்… பாடகர்கள் நடிகர்களாகிறார்கள்… ஆனால் இப்போது நடிகர் விக்ரம் முழுமையான பாடகராகவே மாறியுள்ளார் (நடிப்பை விட்டுடலை.. ஆனா பல பாடகர்கள் வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்!).
கந்தசாமி படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடி அசத்தியிருப்பவர் சாட்சாத் விக்ரமேதான்.
நடிகர்கள் பாடகர்களாகவும அவதாரமெடுப்பது தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். ஆனால் நல்ல குரல் வளம் அவருக்கு உண்டு என இசைஞானியே பாராட்டியுள்ளார். பாடகர்கள் பிழைப்பைக் கெடுக்க வேண்டாமே என ஜஸ்ட் ஒரு பாடலுடன் நிறுத்திக் கொண்டார் அவர்.
இன்றைய நடிகர்களில் கிட்டத்தட்ட தொழில்முறை பாடகர்களுக்கு சற்றும் குறையாத குரல் வளமும், பாடும் திறனும் கொண்டவர் கமல்ஹாசன். அவர் பாடியதை தனி எம்பி3 ஆகவே விட்டிருக்கிறார்கள். இடையில் விஜய் போன்றவர்கள் பாட முயற்சித்தாலும், பாட்டு விஷயத்தில் கமலின் அருகில்கூட அவர்களால் போக முடியவில்லை.
இப்போது விக்ரம் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஒரு பாடகராக அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்தான். ஜெமினி படத்தில் இவர் பாடிய ஓ போடு, ஓஹோவென்று பேசப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது கந்தசாமி படத்தில் அனைத்துப் பாடல்களையும் விக்ரமே பாடி அசத்தியிருக்கிறார்.
இது குறித்து கந்தசாமி படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீதேவி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
விக்ரம் வெறும் நடிகர் மட்டுமல்ல.. பல திறமைகள் கொண்ட அரிய நடிகர். பாகவதர் காலத்தில் பாடத் தெரிந்தவர்கள்தான் நாயகர்கள் என்பார்கள். இப்போது அந்த பாகவதரைப் போலவே பாடும் திறனுடன் கூடிய அருமையான ஹீரோவாக வந்துள்ளார் விக்ரம்.
இந்தப் படத்தில் முதலில் ஒரு பாட்டு மட்டும் பாடுவதாக இருந்தார் விக்ரம். ஆனால் அவர் பாடும் விதம், ஒரு பாடலில் என்னென்ன சிறப்புகள் இருக்க வேண்டுமோ அத்தனை சிறப்புகளையும் அவராகவே செய்யும் அழகு போன்றவற்றைப் பார்த்த பிறகுதான், வேறு பாடகர்கள் எதற்கு என விக்ரமையே பாட வைத்தோம், அவருக்கான அனைத்துப் பாடல்களையும். மிகச் சிறப்பாக வந்துள்ளன பாடல்கள், என்றார்.
அருகிலிருந்த விக்ரம் கூறுகையில், நான் இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடக் காரணம் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சுசி கணேசன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இனி என் படங்களில் நிச்சயம் பாடுவேன். வெளிப்படங்களுக்கும் பாடுவேன், என்றார்.
இயக்குநர் தாணு பேசுகையில், இந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்கும். பாடுவதில் எஸ்பிபிக்கு நிகரான திறமை கொண்டவர் விக்ரம். பாடல்களைக் கேட்டால் நீங்களும் இப்படித்தான் சொல்வீர்கள்.மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் உள்ள படம் கந்தசாமி. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியிடும் திட்டமுள்ளது, என்றார்.
அந்த மொழிகளிலும் விக்ரம்தான் பாடப்போகிறார் என்பது கூடுதல் தகவல்!