வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.
இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.
மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் ஒரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.
சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் தூதரகத்துக்கு தீ வைப்பு:
இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் கார்டூம் நகரி்ல் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் அந்த தூதரகத்திற்கு அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.