11 செப்டம்பர் 2009
எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள்-பிரகாஷ்ராஜ்
அமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் பிரகாஷ் ராஜ்.
காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு தேசிய விருது கிடைத்ததை விட, அதற்கு காரணமான காஞ்சிவரம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருதை நல்ல உழைப்புக்கான அங்கீகாரமாக கருதுகிறேன்.
18 வருடங்களுக்குப்பின், ஒரு தமிழ் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அமீர்கான், ஷாருக்கான், மோகன்லால், சத்யராஜ் ஆகியோரை தாண்டி இந்த விருதை எனக்கு கொடுத்து விட்டதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஷாருக்கான் டி.வி. நடிகராக அறிமுகமாகி, இன்று தயாரிப்பாளர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். `சக்தே இந்தியா'வில் சிறப்பாக நடித்து இருந்தார்.
அமீர்கான் ஒரு லவ் பாயாக அறிமுகமாகி, `லகான்,' `தாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் மூலம் அவர் நடிப்பு பேசப்படுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர். அதேபோல் சத்யராஜ், ஒரு அற்புதமான நடிகர். நான் தேசிய விருது வாங்கியதால், இவர்கள் திறமையில் எதுவும் குறைந்து போய்விடவில்லை.
எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. தேசிய விருது நிரந்தரமானது அல்ல. இந்த வருடம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அடுத்த வருடம் வேறு ஒருவருக்கு கிடைக்கும்.
இந்த விருது மூலம் தமிழ் படத்தின் தரம் தேசிய அளவுக்கு உயர்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படங்களில் பணிபுரிய நடிகர் கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ரசிகர்களும் உற்சாகப்படுத்த வேண்டும்.
காஞ்சிவரம் படத்தில் நடித்தபோதே இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் என்றார்.
முன்னதாக முதல்வர் கருணாநிதியை தனது இரு மகள்களுடன் சென்று சந்தித்து பிரகாஷ் ராஜ் ஆசி பெற்றார்.
''உனக்கு அண்ணா விருதையும், தேசிய விருதையும் நமது 'காஞ்சிபுரம்' வாங்கித் தந்துள்ளது'' என்று தனக்கே உரிய பாணியில் கூறினார் கருணாநிதி . (அறிஞர் அண்ணா காஞ்சியில் பிறந்தவர்).
பின்னர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரகாஷ் ராஜ்.
பிரஸ் மீட்டில் இயக்குனர் ராதாமோகன், நடிகை ஷம்மு உள்ளிட்டோரும் பிரகாஷ் ராஜுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது டூயட் சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் `மயில்' `இனிது இனிது' என இரு படங்கலை தயாரித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் `பயணம்' என்ற படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.