09 செப்டம்பர் 2009
ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ
இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.
சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.
இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.
புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.