“மிஸ் யுனிவர்ஸ்” பட்டத்துக்கான உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 58-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி பகாமஸ் நாட்டில் உள்ள அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நாளை (ஞாயிறு) இரவு நடைபெற உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து 84 நாடுகளைச்சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஏக்தா சவுத்திரி இதில் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான முதல் சுற்று தேர்வுகள் நடந்தன. நீச்சல் உடை போட்டி, அறிவுசார் போட்டி, இரவு நேர உடை போட்டி என்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இணையத்தளம் மூலமாகவும் அழகிகளுக்கு வெற்றிப்புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதிச்சுற்றுப்போட்டி நாளை (ஞாயிறு) இரவு நடக்கிறது. முதல் கட்டமாக அழகிகளின் ஒய்யார அணிவகுப்பு நடை பெறும். பிறகு 10 அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறுவார்கள். அவர்களிடம் நடுவர்கள் கேள்வி கேட்பார்கள். சிறப்பாக பதில் சொல்லும் அழகிக்கு “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் கிடைக்கும். 2009-ம் ஆண்டுக்கான இந்த பட்டத்தை இந்திய அழகி ஏக்தா சவுத்திரி வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீச்சல் உடை போட்டி, நடுவர்களின் கணிப்பு ஆகிய தேர்வுச்சுற்றுக்களில் ஏக்தா மிக, மிக சிறப்பாக முத்திரை பதித்துள்ளார். எனவே பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அழகிகளில் ஒருவராக ஏக்தா கருதப்படுகிறார்.