புஜி பிலிம்(Fuji Film) நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியின் படி மிக விரைவில் Fujifilm FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.ஒரு காலத்தில் புகைப்பட தொழிலில் கோலோச்சி பின்னர் நிக்கான்,கேனான் நிறுவனங்களின் கடும் போட்டியினால் தாக்கு பிடிக்க முடியாமல் பின்னடைந்த புஜி பிலிம் தன் இருப்பை காட்டிக்கொள்ள இப்போது இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் அதிரடியாக களத்தில் இறங்குகிறது.இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடியோக்களையும் முப்பரிமாண முறையிலன்றி வழக்கமான இரு பரிமாண(2D)படங்களையும் எடுக்கவல்லது இந்த கேமரா. இது போக FinePix Real 3D V1 என்னும் 8 இன்ச் அகலமுள்ள டிஜிட்டல் திரை சாதனத்தையும் புஜி பிலிம் அறிமுகப்படுத்தவுள்ளது.3D டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த 3D டிஜிட்டல் திரை சாதனத்தின் மூலம் பார்வையிடலாம்.இது மட்டுமன்றி முப்பரிமாண படங்களை பிரதி எடுக்க புஜி பிலிம் நிறுவனம் விஷேச காகிதங்களை தயாரித்துள்ளது.இந்த காகிதங்களின் மூலம் பிரதி எடுத்த முப்பரிமாண படங்களை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.காகிதங்களில் பிரதியெடுக்க ஆன் லைன் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகி செப்டம்பர் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.