31 ஜூலை 2009
ஏவி.எம் ஸ்டுடியோவில் பயங்கர தீ-ரூ. 3 கோடி செட்கள் நாசம்
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஸ்டுடியோவில் உள்ள 7 வது படப்பிடிப்புத் தளம் முற்றாக எரிந்து நாசமானது. அங்கிருந்த பல செட்கள் அனைத்தும் தீயில் கருகிப் போய் விட்டன.
சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரபலமான ஏவி.எம். ஸ்டுடியோ பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான படப்பிடிப்புத் தளங்கள், ஒலிப் பதிவுக் கூடங்கள், டப்பிங் அரங்குகள், ப்ரிவியூ தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளன.
நேற்று இரவு தொடங்கி நீண்ட நேரம் விஜய்யின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இங்கு நடந்து வந்தது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், அதிகாலை 3 மணிக்கு 7வது படப்பிடிப்புத் தளத்தில் தீ பற்றியுள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பரவி, அந்தத் தளமே முற்றாக எரிந்து நாசமானது.
அங்கு போடப்பட்டிருந்த அனைத்து செட்களுமே எரிந்து போய் விட்டதாக தெரிகிறது.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேலி்ருக்கும் எனத் தெரிகிறது.