Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 மே 2009

IPL பேசப்படாத பக்கங்கள்...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் அறிவிப்பு- கொண்டாட்டங்கள், இந்திய தேர்தல்கள், உலக பொருளாதார நெருக்கடி, வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணை பரிசோதனைகள், பன்றிக் காய்ச்சல் என்று வளர்ந்து கொண்டே செல்லும் சர்வதேச நிகழ்வுகளுக்கு மத்தியில் உலகின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மணித்தியாலங்களை கட்டிப் போட்டிருந்தது IPL பருவம் 2. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து ஒலி ஊடகங்களிலும் IPL பருவம் 2 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒளி ஊடகங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுச் சேவையான செனல் ஐ மாத்திரமே போட்டிகளை ஒளிபரப்பியிருந்தது. எனினும், முதல் இரண்டு நாட்களுக்கு பின்னரே செனல் ஐயில் போட்டிகள் ஒளிபரப்பாகின. 50 நாட்களை கடந்து நடைபெற்ற போட்டிகளில் ஆரம்ப நாட்களில் எவ்விதமான விளம்பர இடைவேளையும் இன்றி ஒளிபரப்பாகிய போட்டிகள் இறுதி நாட்களில் அதிகப்படியான விளம்பரங்களால், போட்டிகளின் போது ஓட்டங்கள், பந்துவீச்சுப் பெறுதிகள் என்பன போடப்படும் சந்தர்ப்பங்களில் விளம்பரங்கள் வந்து குறுக்கிட்டமை சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், எல்லா ஊடகங்களும் IPL பருவம் 2 போட்டிகள் தொடர்பான விபரங்களை தெரிவித்து வந்த போதிலும், போட்டிகள் தவிர சிறப்பு கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றே கூறவேண்டும். • தென்ஆபிரிக்க மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில். • பொலிவூட்டுக்கான தென் ஆபிரிக்க அழகி தெரிவு. உலக பொருளாதாரம் எதிர்கால ஸ்திரத் தன்மை தொடர்பில் பாரிய கேள்விக்குறியாக நிலவும் சந்தர்ப்பத்தில், IPL பருவம் 2 போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடுதல் நிகழ்வின் போது, இந்திய பொருளாதார சுட்டிகள் உயர்வை காட்டியிருந்தன. IPL பருவம் 2 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றால் பொருளாதார சுட்டிகளில் மேலும் உயர்வினை எதிர்பார்க்கலாம் என பல நிறுவனங்களும் ஆசையோடு இருந்தன. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் காலம் என்ற காரணத்தைக் காட்டி போட்டிகளின் போது பாதுகாப்பு வழங்குவது சிரமம் என இந்திய பொலிஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போட்டிகள் தென் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் IPL பருவம் 2 போட்டிகளை தென் ஆபிரிக்காவில் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமைக்கு நிச்சயமாக லலித் மோடி பாராட்டப்பட வேண்டியவரே. அதனையும் மீறி அவர் செய்த மற்றுமொரு விடயமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை லலித் மோடிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுதான் 8 மில்லியன் ரான்ட் பணத்தை தென்ஆபிரிக்காவின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு கட்டங்களில் வழங்குவதற்கு IPL இணங்கியிருந்தமை. போட்டிகள் நடத்தப்படுவதற்கு தென் ஆபிரிக்க அரசினால் இது ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எது, எப்படியிருந்தாலும் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கின்றது என்ற வகையில் திருப்தியடைந்து கொள்ள முடிகின்றது. 'Help Educate And Teach' (HEAT) என்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 8 மில்லியன் ரான்ட், தென் ஆபிரிக்காவில் உள்ள பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரான்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அப்பாடசாலைகளின் புலமைப்பரிசில் நிதிய கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணத்தை எந்த வகையில் புலமைப்பரிசில்களுக்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது அப்பாடசாலையின் நிர்வாகக் குழுவையே சார்ந்துள்ளது. அடுத்து போட்டிகளையும் காண வருபவர்களில் ஒரு போட்டிக்கு தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரான்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்கள் பெயரில், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் பாடசாலை கட்டணமாக வைப்பிலிடப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனம் ஒன்று நாடொன்றின் கல்வித்துறைக்காக இவ்வளவு பெரிய நிதியை வழங்கியுள்ளமை இதுவே முதற்தடவையாகும். தென் ஆபிரிக்காவின் கல்வி முறை குறித்த ஒரு சுருக்கமான பார்வையும், இவ்வளவு பெரிய நிதி கல்வித்துறைக்காக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். தென்ஆபிரிக்காவில் கல்வி. தென் ஆபிரிக்காவில் 12.3 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் 38600 ஆசிரியர்களின் கீழ் 26292 பாடசாலைகளில் கற்கின்றனர். அவற்றில் 1098 பாடசாலைகள் பதிவு செய்யப்பட்ட சுதந்திரமான தனியார் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. கல்விக்கான தேசிய திணைக்களமே தென்ஆபிரிக்காவின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கண்காணித்து வருகின்றது. அது தவிர்த்து தென்ஆபிரிக்காவின் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்து கல்வித் திணைக்களங்களும் இருக்கின்றன. தென்ஆபிரிக்க கல்வித் திட்டம் பொது, வேறு மற்றும் உயர் ஆகிய மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றது. உலகிலேயே கல்விக்காக அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் தென்ஆபிரிக்கா காணப்படுகின்றது. மிஸ். பொலிவூட் IPL 34வயதான மொடல் நடிகையான டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவூட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். மிஸ்.பொலிவூட் பட்டத்திற்காக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டவர்களில் 48 அழகிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்களிப்புக்களின் அடிப்படையிலேயே டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவுட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். இந்த வாக்கெடுப்பு IPL T20 இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்டது. 24 வயதான ஜினா க்ளவ்ட் இரண்டாவது இடத்தையும், டுனாய் னோர்ட்ஜே மூன்றாவது இடத்தையும் பெற்றனர். மிஸ். பொலிவுட்டாக தெரிவுசெய்யப்பட்ட டூன் கொசட்ஸ் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார். இந்த பட்டத்திற்கான பரிசாக, இலவச இந்திய சுற்றுப் பயணம் ஒன்றுக்கு டூன் கொசட்ஸ் தயாராகி வருகின்றார். இதில் வெற்றி பெறுபவர் பொலிவூட்டில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதிரிகள்: • அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 16320 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன், 697 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. • வேகப்பந்துவீச்சாளர்கள் 388 விக்கெட்டுக்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 226 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். • டெக்கான் சார்ஜர்ஸ் அணி அதிக எண்ணிக்கையிலான(99) ஆறு ஒட்டங்களை பெற்றது. • அதிக ஆறு ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்களாக முதலிடத்தை ராஜஸ்தான் ரோயல்ஸின் ஷேன் வோர்னும், பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் பிரவீன் குமாரும் தலா 14 ஆறு ஓட்டங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். • ஓட்டமற்ற பந்துகளை வீசியவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங் 169 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் இருக்கின்றார். சென்னை சுப்பர் கிங்ஸின் முத்தையா முரளிதரன் 144 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றார். • அணியொன்றினால் வீசப்பட்ட செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களின் எண்ணிக்கை வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19 செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் உள்ளது. • அதிக அகலப்பந்துகளை வீசிய அணிகளின் வரிசையில் 68 அகலப் பந்துகளுடன் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. • அதிக முறை ஓடும் போது ஆட்டமிழப்பு செய்யப்பட்ட அணி வீரர்களின் வரிசையில் 22 ஆட்டமிழப்புக்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. • 20க்கு20 போட்டிகளின் நிர்ணயமிக்க கடைசி 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 13 விக்கெட்டுக்களுடன், மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார். • 12 போட்டிகளில் 572 ஓட்டங்களைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மெத்யூ ஹெய்டன் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • 16 போட்டிகளில் 23 விக்கெட்டுக்களை வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் இளம் வீரரான மனிஷ் பான்டே ஆட்டமிழக்காத 114 ஓட்டங்களுடன், அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • அதிக பிடிகளை எடுத்த வீரர்கள் வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸின் எபி. டிவிலியர்ஸ், 15 போட்டிகளில் 13 பிடிகளுடன் முதலிடத்தில் உள்ளார். • போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மஸ்ரபி மோர்டாசா முதலிடத்தில் உள்ளார். • அதிக 50 ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் மும்மை இந்தியன்ஸின் ஜே.பி. டும்னி மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸின் மெத்யு ஹெய்டன் ஆகியோர் 5 தடவைகள் 50 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். • அதிக முறை ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஹேர்சல் கிப்ஸ், 4 போட்டிகளில் ஓட்டம் எதனையும் பெறாது முதலிடத்தில் உள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com