Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 மே 2009

IPL 2009 - கோப்பையை வென்றது டெக்கான் அணி

_______________________________________________________________________________________________________ இறுதிப் போட்டியின் இறுதி ஓவர். 15 ரன் எடுக்க வேண்டும். பெங்களூர் கேப்டன் அனில் கும்ப்ளேயும் ராபின் உத்தப்பாவும் களத்தில் இருக்கிறார்கள். அணியின் கடைசி ஜோடி இது. ஆர்.பி. சிங் பந்து வீசுகிறார். முதல் பந்தில் கும்ப்ளே ஒரு ரன் எடுக்கிறார். அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்திலும் ரன் இல்லை. அடுத்த மூன்று பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அற்புதமான பந்து வீச்சு, அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றால் டெக்கான் வெற்றி வாகை சூடியது. 2008 ஐ.பி.எல். போட்டிகளில் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் அணி இரண்டாம் ஆண்டில் சாம்பியனாகத் தலை நிமிர்ந்தது. கடந்த 40 நாட்களாக நடந்துவந்த பரபரப்பான போட்டிகள் முடிவுக்கு வந்தன. கடைநிலையில் இருந்த இரண்டு அணிகள் கடுமையாகப் போராடி உச்சத்தை அடைந்து சிகரத்தைத் தொடுவதற்கான இறுதிப் போட்டியில் இன்று களம் கண்டன. டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த அனில் கும்ப்ளே முதல் ஓவரைத் தானே வீசினார். ஆடம் கில் கிறிஸ்டை மூன்றாவது பந்திலேயே அவுட் ஆக்கினார். அதன் பிறகு திருமலசெட்டி சுமன் வினய் குமார் பந்தில் வீழ்ந்தாலும் ஆன்ட்ரூ சைமன்ட்ஸும் ஹர்ஷல் கிப்ஸும் அணியை நிலைப்படுத்தத் தொடங்கினார்கள். சைமன்ட்ஸை அவுட் ஆக்கி அணியின் நம்பிக்கையைப் புதுப்பித்தார் கும்ப்ளே. ரோஹித் ஷர்மாவும் கிப்ஸும் மெதுவாகத் தொடங்கிச் சீராக வேகம் பெற்று ஆடினார்கள்.ரன் வேகம் ஏறத் தொடங்கியது. 17ஆம் ஓவரை வீசிய கும்ப்ளே மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். ஷர்மாவையும் வேணுகோபால் ராவையும் அவுட் ஆக்கினார். டெக்கானின் வேகம் தடைப்பட்டது. கேப்டன் கும்ப்ளே இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 4 ஓவர்களில் 16 ரன் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். டெக்கான் 143 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. டெக்கான் அணி அவ்வளவு சுலபமாகப் பணிந்துவிடத் தயாராக இல்லை. ரையான் ஹாரிஸ் ரன்களை அதிகம் கொடுத்தாலும் ஆர்.பி. சிங்கும் பிரக்யான் ஓஜாவும் சிக்கனமாகப் போட்டதுடன் முக்கியமான விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். சிங் ஜேக் காலிஸை அவுட் ஆக்கினார். ஓஜா கடந்த இரு ஆட்டங்களின் ஹீரோவான மனீஷ் பாண்டேயையும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மெர்வையும் அவுட் ஆக்கினார். 57-3 என்னும் நிலையில் 9ஆம் ஓவரில் ஜோடி சேர்ந்த திராவிடும் ரோஸ் டெய்லரும் அணியை மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்டம் பெங்களூருக்குச் சாதகமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஹர்மீத் சிங்கின் பந்தில் திராவிட் வீழ்ந்தார். டெய்லரையும் விராட் கோஹ்லியையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கித் திருப்பத்தை ஏற்படுத்தினார் சைமன்ட்ஸ்.பிறகு மார்க் பவுச்சரை ஹம்ரீத் சிங்கும் பிரவீண் குமாரை ஓஜாவும் அவுட் ஆக்கியதில் ஆட்டம் பெங்களூரின் கையை விட்டு நழுவியது. 113-8 என்று தள்ளாடியது. இன்னும் 18 பந்துகளில் 31 ரன் எடுக்க வேண்டும் என்னும் நிலையில் ராபின் உத்தப்பாவால் சாதிக்க முடியவில்லை. பெங்களூர் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்றைய ஆடுகளம் மட்டை வீச்சுக்குச் சாதகமானது இல்லைதான். ஆனால் ரன்கள் குறைவாக இருந்ததால் சற்றுக் கவனமாக ஆடியிருந்தால் பெங்களூர் வென்றிருக்கலாம். காலிஸ்,பாண்டே, திராவிட், கோஹ்லி, பவுச்சர் ஆகிய மட்டையாளர்கள் நின்று ஆடத் தவறியதால் கோப்பை கை நழுவியது. குறைவான ரன் எடுத்தாலும் கட்டுப்பாடான பந்து வீச்சு, நல்லஃபீல்டிங் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெறலாம் என்று டெக்கான் உணர்த்தியது. தான்தலைமை ஏற்ற 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்ற அனில் கும்ப்ளே அரை இறுதிப்போட்டி முடிந்ததும் நாளை இரவு மேலும் ஒரு வெற்றி கிடைத்தால் நன்றாகஇருக்கும் என்று சொன்னார். அவர் ஆசை நிரைவேறவில்லை என்றாலும் இறுதிப் போட்டிக்கு வந்த பெங்களூர் அணியின் அபாரமான முயற்சியையும்கும்ப்ளேயின் சிறப்பான தலைமையையும் பங்களிப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகக் குறுகிய காலத்தில் தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியக் கிரிக்கெட் வாரியத்தைப் பாராட்டாமல்இருக்க முடியாது. பல திறமைசாலிகளை அடையாளம் காட்டிப் பல துடிப்பான மேட்சுகளைஅரங்கேற்றிய ஐ.பி.எல். 2009 போட்டித் தொடர் அற்புதமான ஒரு மேட்சுடன் முடிவுக்கு வந்தது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com