15 மார்ச் 2009
ரிச்சர்ட்ஸை நினைவூட்டும் ஷேவாக்- ஸ்ரீகாந்த்
ஹேமில்டன்: மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸின் நிழலை நான் ஷேவாக்கிடம் காண்கிறேன். ஷேவாக்கின் ரசிகனாகி விட்டேன் நான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தேர்வாளர் குழுத் தலைரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
நியூசிலாந்து அணியினரின் தூக்கத்தை கெடுத்து விட்டார் ஷேவாக். அடித்து விளாசிக் கொண்டிருக்கும் அவரை அவுட் செய்ய என்னய்யா வழி என்று நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்றும் அவர் பீதியுடன் கூறுகிறார். அந்த அளவுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை பீதிக்குள்ளாக்கி வைத்திருக்கிறது ஷேவாக்கின் பிரமிப்பூட்டும் அதிரடி ஆட்டம்.
குறிப்பாக நான்காவது ஒரு நாள் போட்டியில் 60 பந்துகளில் சதம் போட்டு நியூசிலாந்து வீரர்களை சத்தாய்த்து விட்டார் ஷேவாக்.
இப்படி ஷேவாக் விளையாடி வருவதை ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் எனது ஹீரோ. ஷேவாக்கின் ஆட்டத்தை பார்க்கும் போது ரிச்சர்ட்சை நினைவு படுத்துகிறார். அவர் போல ஷேவாக் அதிரடியாக ஆடுகிறார். நான் ஷேவாக்கின் ரசிகராக மாறி விட்டேன்.
இந்திய அணி சமீபகாலமாக மிகவும் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். எல்லா மைதானங்களிலும் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். உலகின் சிறந்த அணியாக இந்தியா உருவாகும் என்றார்.
முன்னாள் தேர்வுகுழு தலைவர் வெங்சர்க்கார் கூறும் போது, இந்தியாவின் பலமே பேட்டிங்தான். பந்து வீச்சுதான் இன்னும் வலுவாக வேண்டும் என்றார்.
முன்னாள் கேப்டன் கும்ப்ளே கூறுகையில், ஷேவாக் அருமையான வீரர். அவர் நல்ல பார்மில் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து அவரை விளையாட வைக்க வேண்டும். அவருக்கு ஓய்வு தர கூடாது. காரணம், எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக திரும்பக் கூடியவர் அவர் என்றார்.