கிரெடிட் கார்டுகள், பயிற்சிக்கான ஷூஸ், சமூகத்தை ஒன்றிணைக்கும் இணைதளங்கள், ஜி.பி.எஸ். டெக்னாலஜி உள்ளிட்ட 10 சங்கதிகளை உலகை மாற்றிய சங்கதிகளாக வரிசைப்படுத்தி உள்ளனர் அறிவியலாளர்கள். பிரிட்டனின் தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் வாரத்தை ஒட்டி, 20 அறிவியலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, உலகை மாற்றிய டாப் 10 சங்கதிகள் குறித்து அலசப்பட்டது.
அவர்கள் வரிசைப்படுத்திய டாப் 10 சங்கதிகள் இதோ:
ஜி.பி.எஸ். டெக்னாலஜி: அமெரிக்க ராணுவம் தங்கள் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்த டெக்னாலஜி இது. ஆனால், உலகின் முகத்தை நம் முன்னாடி காட்டிவிடும் இந்த தொழில்நுட்பம் கார்கள், விமானங்கள், படகுகள் என சிறந்த வழிகாட்டியாக மாறிவிட்டது.
சோனி வாக்மேன்: இன்றைக்கு காதுக்குள்ளேயே பாட்டு கேட்டுக்கற பல சங்கதிகள் வந்துவிட்டாலும், அதற்கு முன்னோடி சோனி நிறுவனம் தான். அது 1979 இல் கண்டுபிடித்து விற்பனைக்குவிட்ட சோனி வாக்மேன்தான் 2வது முக்கிய சங்கதிபார்கோட்: எந்த பொருளானாலும் தற்போது பார்கோடு இல்லாமல் வருவதில்லை. பார்கோடில் உள்ள கருப்பு வெள்ளைக் கோடுகள்தான் ஒரு பொருளின் விலையை உலக அளவில் துல்லியமாகக் குறிப்பிட உதவுகின்றன. நார்மன் வுட்லேண்ட் என்பவர் 1949இல் கண்டறிந்தது இது
ரெடிமேட் உணவுகள்: அவசரகதியில் இயங்கும் உலகை அதே சீரான இயக்கத்தில் வைக்க உதவும் சங்கதி. 1970க்குப் பிறகு சுறுசுறுவென எகிற ஆரம்பித்த ரெடிமேட் உணவு ஜூரம் இப்போது உலகம் முழுக்க காய்ச்சி எடுக்கிறது என்றால் மிகையில்லை.
ப்ளே ஸ்டேஷன்: அடுத்தது சோனி 1994 இல் கண்டுபிடித்த ப்ளே ஸ்டேஷன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தனி ப்ளே ஸ்டேஷன் முதல் குழந்தைகளின் படுக்கை அறை வரை வியாபித்திருக்கும் சங்கதி இது. குழந்தைகள் உலகத்தில் இதற்கு முக்கிய இடமுண்டு.
சோசியல் நெட்வொர்க்கிங்: சமூகத்தை ஒன்றிணைக்கும் இணையதளங்கள் என்று சொல்லலாம். ஃபேஸ்புக் என்ற இணை தளம் மூலம் மட்டுமே 3 கோடி மனித நிமிடங்கள் தினசரி செலவழிக்கப்படுகிறதாம். மேலும், மனிதர்களை இணைக்க உதவும் மைஃபேஸ் மற்றும் டிவிட்டர் இணையதளங்களும் இவ்விஷயத்தில் முக்கிய பங்கை ஆற்றிவருகின்றன. இந்த இணையதளங்களால் உரையாடல் கலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது. இவற்றின் மூலம் உலகம் முழுக்க உள்ள எண்ணற்ற நண்பர்கள் மற்றும் புதியவர்களுடன் நம்முடைய தொழில் ரீதியான, தனிப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது..
மெசேஜ்ஜிங்: செல்போனில் மெசேஜ் அனுப்பும் முறை மொழியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மொழியை பயன்படுத்தும் முறை, சுருக்கமாகக் குறிப்பிடுதல், இலக்கணம் என நிறைய மாற்றங்களை இந்த மெசேஜ் அனுப்பும் முறை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆங்கில மொழியில் நிறைய மாற்றங்களை இது ஏற்படுத்தியுள்ளதாம்.
எலக்ட்ரானிக் மணி(கிரெடிட் கார்டுகள்): இவை இல்லாவிட்டால் நிறைய பேருக்கு வாழ்க்கை நகராது. கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ள வசதியானவை மட்டுமல்ல பாதுகாப்பானவையும்கூட. இது இருந்தால் போது உலகை வெறும் கையால் முழம் போட்டுவிடலாம் அல்லது வலம் வந்துவிடலாம். எதை வேண்டுமானாலும் எங்கிருந்தபடியும் வாங்கமுடியும் அப்பா, அம்மா உறவுகளைத் தவிர.
மைக்ரோ வேவ்ஸ்: இது மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு பேச்சு மூச்சு இருக்காது. ஆமாங்க, நாம் பயன்படுத்தும் செல்போன்கள், இணையதள இணைப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, அவற்றை இயக்குவது எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் எனப்படும் நுண்ணிய அலைகளே. மேற்கூறிய சாதனங்கள் இயங்க, சிக்னல்பெற இந்த நுண்ணிய அலைகள் (அலை நீளம்) ஒரு மில்லி மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றி சுழன்றுக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியாது.
டிரெய்னர்ஸ்: டிரெய்னர்ஸ் எனப்படும் பயிற்சி மற்றும் சாதாரண பயன்பாட்டுக்கு உதவும் ஷூக்கள். குட்இயர் மெட்டாலிக் ஷூ கம்பெனி ரப்பரை துணிகளில் உருக்கி ஊற்றி, 1892 இல் கண்டறிந்தது தான் இந்த வித ஷூக்கள். இவை இல்லாவிட்டால் இன்றைக்கு யாராவது ஓடுவார்களா ஆடுவார்களா என்பது சந்தேகம்தான்.