
16 மார்ச் 2009
நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ..!
தமிழ் சினிமாவில் 'கலைக் குடும்பம்' என்று செல்லமாக அழைக்கப்படும், நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று விமரிசையாக நடந்தது.
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். வனிதாவுக்கும், பிரீதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 3-வது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் ராகுல் ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியின் மகன். ஹைதராபாத்தில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஸ்ரீதேவி-ராகுல் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமார்-மஞ்சுளா வீட்டில் நேற்று மாலை விமரிசையாக நடந்தது. இரவு 7.15 மணிக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓத நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது.
மணமகன் ராகுலுக்கு மணமகள் ஸ்ரீதேவியின் அண்ணன் நடிகர் அருண் விஜய் மாலை அணிவித்தார். அதன்பிறகு சம்பந்திகள் நிச்சய தாம்பூல தட்டுகளை மாற்றிக் கொண்டனர். புரோகிதர்கள் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்ததும் ஸ்ரீதேவியும், ராகுலும் மோதிரம் அணிவித்துக் கொண்டார்கள்.
திரண்டது திரையுலகம்:
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா, நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுந்தர்.சி, சந்திரசேகர், தியாகு, சஞ்சீவ், முன்னா, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகைகள் மீனா, குஷ்பு, சங்கவி, சங்கீதா, லட்சுமி, ராஜஸ்ரீ, லதா, மகேஷ்வரி, டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி, இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழி, பேத்தி ஐஸ்வர்யா, பட அதிபர்கள் டி.சிவா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
திருமணம்:
ஸ்ரீதேவி- ராகுல் திருமணம் ஜுன் மாதம் 18-ந் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
