ரஜினியை திரையில் ரசித்தவர், இப்போது அவர் படத்துக்கே சவுண்ட் டிஸைனராகிறார்! – ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்
சவுண்ட் டிசைனிங் எனப்படும் ஒலி வடிவமைப்பு இன்றைக்கு படங்களில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் ரொம்ப வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது பாலிவுட்டிலும் சவுண்ட் டிஸைனிங் இல்லாத படங்கள் இல்லை என்ற நிலை. ஆனால் கோலிவுட்டில், சவுண்ட் டிசைனிங் பற்றிய உணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை. தமிழில் பக்கா சவுண்ட் டிசைனிங்குடன் வெளியான முதல் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. செய்தவர் குணால் ராஜன். இவர் வசிப்பது இங்கல்ல… அமெரிக்காவில்!
ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் டிசைனராகக் கலக்குகிறார் (செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலமாச்சே…).
புதுச்சேரியைச் சேர்ந்தவர் குணால் ராஜன். அமெரிக்காவில் 20 வயதில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் (அமெரிக்காவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த வெப் சீரிஸ்தான்!) என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
ஜான் எம் சூ இயக்கிய ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸுக்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். அடுத்து இதே இயக்குநரின் எல்டிஎக்ஸ் படத்திலும் குணால் பணிபுரிகிறார். சமீபத்தில்தான் வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க ஸ்டீரிமி அவார்டு வாங்கியிருக்கிறார் குணால்.
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். ஸ்லம்டாக் மில்லியனேர், ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவருக்கு லேட்டஸ்டாகக் கிடைத்துள்ள அஸைன்மெண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஷங்கரின் ‘எந்திரன்’ சவுண்ட் டிஸைனிங்!
விஷயம் கசிந்ததும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் அலுவலகத்திலிருந்து, தொலைபேசியில் பேசினோம்.
அவர் கூறுகையில், “தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்..” என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.
“எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான சில காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்” என்றார்.
எந்திரன் படக் காட்சிகளைப் பார்த்துவிட்டீர்களா என்றால், ஒரு கணம் அமைதி காத்தவர், “சில காட்சிகளைப் பார்த்தேன். ஆனால் எதையும் நான் வெளியில் சொல்ல முடியாது. ஒரு ட்ரெயின் ஃபைட், மிரட்டலான க்ளைமாக்ஸ் போன்றவற்றைப் பார்த்தபிறகுதான் அந்தப் படத்தின் ரேஞ்ச் தெரிந்தது. தமிழில் இதுபோல ஒரு படம் பார்த்ததில்லை. இது முதல்தரமான ஒரு ஹாலிவுட் படம் என்ற உணர்வுடன்தான் பணியாற்றப் போகிறேன்…”, என்கிறார்.
என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டுமல்லவா…?
இந்தக் கேள்வியை முன் வைத்ததும், “மிகவும் கவலைக்குரிய உண்மை அது,” என்றவர், “இன்றைய சூழலில் 10 சதவிகித திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை…” என்றார்.
சுவாரஸ்யமான விஷயம்: குணால் ஒரு தீவிர ரஜினி ரசிகர்!
“அதெப்படிங்க இல்லாம இருக்க முடியும்… தமிழ்நாட்டு இளைஞன் ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனா இல்லாம இருந்தாத்தான் அது நியூஸ். எத்தனை பெரிய லெவல்ல இருந்தாலும், ரஜினி படம்னா, ரசிகர்களுள் ஒருத்தனா மாறிடுவேன். அவர் படத்தை செமஜாலியா பார்த்து ரசிச்ச நான், இப்போ அவர் படத்துக்கே சவுண்ட் டிசைன் பண்றேன். சந்தோஷமா இருக்கு…” என்றார் ஒரு ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன்…!
நன்றிஎன்வழி