இது விமர்சனம் அல்ல என்னோட பார்வை இப்பெல்லாம் படம் வெளிவந்து இரண்டு நாள் கழித்து பதிவிட்டாலே என்னங்க ரொம்ப தாமதமா பதிவு போடுறீங்க என்று சொல்றாங்க! ஒரே குஷ்டமப்பா
முதல்லையே சொல்லிடுறேன் காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை.
நான் கூட சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் பட்டாசாக இருக்கிறது. கண்டிப்பாக சிங்கம் வெற்றிப்படம் தான் சந்தேகமே இல்லை.

சூர்யா நிஜமாகவே காவல்துறை அதிகாரியாக அசத்தி இருக்கிறார். மிடுக்கிலும் சரி உடல் மொழியிலும் சரி பின்னி பெடலேடுத்து இருக்கிறார். அவருக்கு வேகம் நன்றாக பொருந்தியுள்ளது. அடிதடி எல்லாம் மிகைப்படுத்தப்பட்டது என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி அவரது உடல்வாகு உள்ளது.
அனுஷ்கா ….யப்பா! அருந்ததி படத்திற்கு பிறகு இப்ப தான் பார்க்கிறேன். என் இதயம் பாடலில் எனக்கு (மட்டுமல்ல பலருக்கும்) நெஞ்சு வலி வரவைத்து விடுவார் போல இதயம் பலகீனமானவர்கள் (ஆண்கள்) என் இதயம் பாடல் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன் LOL
அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார், எப்படியும் ஆறடி இருப்பார் போல உள்ளது. நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு. ஒரு கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள், அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசனம் பேசி நடித்து இருக்கிறார். என்ன கொடுமை சார்!
பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில். கையெழுத்து போட காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல். ஏன்டா! சென்னைல நான் எப்படிப்பட்ட ஆளு! என்னை இங்க இப்படி சப்பை ரவுடி மாதிரி ஆக்கிட்டீங்களேடான்னு! என்று எண்ணும்படி அவர் கடுப்பில் பார்ப்பது ரகளையாக இருக்கும்
சூர்யாவிற்கு சென்னையில் பிரகாஸ்ராஜ் தனது ஆட்களை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுத்து காமெடி பீஸ் மாதிரி ஆக்கி அவர் அதை பார்த்து ரசித்து சிரிப்பது கலக்கலா இருக்கும். அதிலும் ஒரு கும்பல் கொலைகொலையா முந்தரிக்கா பாடலை பாடி செம வெறுப்பேத்தி விடும் ஆனால் அதற்கு சூர்யா அதே ஸ்டைலில் நொறுக்கி எடுப்பது சரவெடி! அந்த இடத்தில் பின்னணி இசை தூள் கிளப்புது.
விவேக் காமெடி செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார் போல! இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கிறது, யாருப்பா இவருக்கெல்லாம் பத்ம ஸ்ரீ கொடுத்து மானத்தை வாங்குறது! இவருக்கு ஆபாச ஸ்ரீ என்று தான் பட்டம் கொடுக்கணும். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலை பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார் மறுப்பதற்கில்லை. விவேக்கிற்கு வயசாகி விட்டது முகத்தை பார்த்தாலே தெரிகிறது… இதற்கு அவரது (இரட்டை அர்த்த) பாணியிலே ஒரு கமெண்ட் அடிக்க முடியும்……. சரி! அவர் மாதிரி எதுக்கு நாமளும்.
இயக்குனர் ஹரியின் பலமே திரைக்கதை தான் உடன் சில புத்திசாலிதனமான காட்சிகள் இவையே படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. அதை இந்தப்படத்திலும் செவ்வனே செய்து இருக்கிறார். அடிக்கடி காட்சிகளை Fast forward செய்வதும் படத்தை வேகமாக்க ஓரளவு உதவி புரிந்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை அதற்குண்டான காட்சிகளும் அமைவதால். இவரோட தமிழ் படத்தை (பிரசாந்த் நடித்தது) இதுவரை பார்க்காமல் இருந்தால் பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.


சிங்கம் பாடல் பலர் நன்றாக இல்லை என்று கூறினார்கள் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. இதற்காகவே பாடலை iPod ல் பலமுறை கேட்ட பிறகே பாடல் பற்றி எழுதினேன். காரணம் அயன் படம் விமர்சனம் எழுதும் போது பாடல் சுமார் என்று எழுதி இருந்தேன் பின்னர் பலமுறை கேட்ட பிறகு அனைத்து பாடல்களுமே நன்றாக இருந்தது. சிங்கம் படத்தின் பாடல்களில் வெரைட்டி இல்லை ஆனால் கண்டிப்பாக ஹிட் ஆகும்.
பொழுது போகணும் என்று நினைப்பவர்கள் தாராளமாக படத்திற்கு செல்லலாம்… என்னய்யா! சிங்கம்…. என்னய்யா! பில்டப் என்று லாஜிக் பார்க்கும் பெருமக்கள் எட்டியே பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொசுறு 1
சிங்கையில் 9 திரையரங்கில் சிங்கம் படத்தை வெளியிட்டு இருந்தார்கள். எனக்கு தெரிந்து அதிகளவில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். சிங்கையில் சூர்யாவிற்கு தற்போது ரசிகர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பலர் தங்கள் விருப்ப நடிகராக சூர்யாவை கூறுவதை கேட்க முடிகிறது.
கொசுறு 2
இது என்னுடைய 300 வது இடுகை. ஒவ்வொருமுறையும் வரலாறை கூறுவது வெட்டி வேலையாக தெரிவதால் (எனக்கு வரலாறு முக்கியம் இல்லை அமைச்சரே! ) இந்தமுறை நன்றி கூறுவதோடு முடித்து விடுகிறேன். எனக்கு பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளிக்கும் நண்பர்களுக்கும், ரீடரில் மட்டுமே படித்துக்கொண்டு என் தளத்திற்கு எட்டியே பார்க்காத நண்பர்களுக்கும் Google Friend Connect ல் பின் தொடரும் நண்பர்களுக்கும் மின்னஞ்சலில் பின்தொடரும் நண்பர்களுக்கும் இந்தசமயத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.