28 ஆகஸ்ட் 2009
எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்! - சோனியா அகர்வால்
பொதுவாக காதலியைப் பிரிந்த காதலர்கள் அல்லது மனைவியைப் பிரிந்த கணவர்கள்தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார்கள். இப்போது நிலைமை உல்டாவாகிவிட்டது. பெண்களும் இந்த வார்த்தயைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மிக சமீபத்தில் கிட்டத்தட்ட இந்த வாசகத்தைப் பயன்படுத்தியிருப்பவர் சோனியா அகர்வால்.
செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டு இப்போது பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ள சோனியா அகர்வால், தங்கள் மண முறிவுக்கான காரணங்களை லேசுபாசாக மீடியாவில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
சமீபத்தில் ஆங்கில நாளிதள் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் நாளாக ஆக செல்வா மாறிவிட்டார். எங்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றிவிட்டன. பின்னர்தான், என்ன காரணம் என்பதை இருவரும் புரிந்து கொண்டோம். ஒன்றாக வாழ்ந்தது போதும்,
கணவன் - மனைவியாக இருந்த போதும்கூட நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இறுதி நாட்களில் வெறுமையும் வெறுப்பும் ஆக்கிரமிக்கும் முன் பிரிந்துவிட்டோம். இப்போது நிம்மதியாகத்தான் உள்ளது. மனதுக்குள் எந்த வருத்தமும் இல்லை, திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பத் தவிர!
அதற்காக செல்வராகவனை நான் வெறுக்கவில்லை. செல்வராகவனை இப்போது நண்பராப்க பார்க்கிறேன். எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். எதிர்காலத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டும்... எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் என்று வாழ்த்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியிலும் அவர் ஆண்ட்ரியா பற்றி பேச மறுப்புத் தெரிவித்திருந்தார்.