ஆமதாபாத்தை சேர்ந்த சங்கல்ப் ஹோட்டல்கள் நீண்ட தோசைகளை சுடுவதில் பிரபலமானவர்கள். இவர்கள் கடந்த 1997ல் முதன் முறையாக 25 அடி நீள தோசை தயாரித்து கின்னசில் இடம்பிடித்தனர். பின்னர் 2006 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக 30 அடி 5 அங்குல நீளத்துக்கு தோசை தயாரித்து சாதனை படைத்தனர்.
தற்போது கடந்த 19ம் தேதி 32.5 அடி நீளத்துக்கு மொறு, மொறு தோசையை வெறும் 40 நிமிடங்களில் தயாரித்து தங்களது முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.
இந்த தோசைக்கு விரைவில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கும் குயிக் கன் முருகன் என்ற திரைபடத்தின் பெயரை சூட்டியுள்ளனர். இந்த படம் சைவத்தின் பெருமை உணர்த்துவதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த தோசையை 16 சமையலறிஞர்களும், 8 உதவியாளர்களும் சேர்ந்து 10 நாள் கடும் பயிற்சிக்கு பின் தயாரித்துள்ளனர்.
இது குறித்து சுவாமி கோடா என்ற சமையலறிஞர் கூறுகையில்,
இதற்காக நாங்கள் 35 அடி நீள இரும்பிலான தோசை கல்லை பயன்படுத்தினோம். கல்லின் அனைத்து பகுதிகளும் ஒரே வெப்ப நிலையில் வைத்திருக்க மிகவும் கஷ்டப்பட்டோம். மாவை 32.5 அடி நீளத்துக்கு ஊற்றி தோசை சுடுவது சாதாரணம் அல்ல என்றார்.