சிகரெட் உட்பட புகையிலை பயன்பாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகிறார். ஆனால், அவரால் “தம்’ அடிக்காமல் இருக்க முடியவில்லையாம்.
அமெரிக்காவில் புகையிலை மற்றும் அதை சார்ந்த பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிதாக பல சட்டங்களை போட்டுள்ளார் ஒபாமா. சமீபத்தில் கூட, புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார்.இப்புதிய சட்டம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துதுறையினருக்கு, புகையிலைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.
கையெழுத்திட்ட அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், “புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தற்போது கடுமையாக போராடி வருகிறேன். நான் எனது குடும்பத்தினர் முன் புகைப்பிடித்தது இல்லை. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து 95 சதவீதம் விடுபட்டுள்ளேன். எனினும், சில நேரங்களில் நான் மனம் தடுமாறி விடுகிறேன். புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில், 90 சதவீதத்தினர் தங்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுகின்றனர். அதில் நானும் ஒருவன்’ என்றார்.