05 ஏப்ரல் 2009
எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான
ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்!
கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல்.
ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.
திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள்.
இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன.
இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!