11 ஏப்ரல் 2009
கந்தசாமி குழுவுடன் திருப்போரூர் மக்கள் மோதல்!
திருப்போரூர் அருகே கந்தசாமி படப்பிடிப்பு நடைபெற்றபோது, உள்ளூர் மக்களுக்கும், கந்தசாமி குழுவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயங்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. விக்ரம் ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தின் அசத்தல் ட்ரைலர்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கோடையின் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கும் கந்தசாமியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சில காமெடி காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருந்ததால், சென்னையை அடுத்த திருப்போரூரில் கடந்த 3 நாட்களாக அந்தக் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.
நேற்று மாலை இந்தப் படத்தின் சில காட்சிகள், அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் வீட்டின் வாசலில் நடைபெற்றுக் கண்டிருந்தது.
அப்போது வீட்டு உரிமையாளர் வெளியூர் போயிருந்தாராம். உடன் தனது குழந்தைகளையும் கூட்டிப் போயிருக்கிறார். வீடு திரும்பும்போது, முதலில் குழந்தைகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களை அந்தப் பக்கம் விடமறுத்து இழுத்துத் தள்ளியுள்ளனர் படப்பிடிப்புக்கு காவலாக நிறுத்தப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள். அப்போது ஒரு காமெடி காட்சி படமாகிக் கொண்டிருந்ததாம்.
தகவல் தெரிந்ததும் கடுப்பான வீட்டு உரிமையாளர் அந்த செக்யூரிட்டிகளுடன் கடுமையான வாய்த் தகராறில் இறங்க, அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் சேர்ந்து கொள்ள பெரும் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
பின்னர் இயக்குநர் சுசிகணேசனும் மன்சூர் அலிகானும் வடிவேலுவும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகுதான் மீண்டும் படம் பிடிக்கவே அனுமதித்தார்களாம்.