லண்டன்: லண்டன் பாராலிம்பிக் போட்டியின்போது வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் மெஹராத் கரம் ஜடே, பதக்கத்தைக் கொடுத்த இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்தார். தங்களது நாட்டுக் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத பெண்ணைத் தொடக் கூடாது என்பதால் இவ்வாறு கை குலுக்க மறுத்ததாக பின்னர் ஈரானியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேசமயம், ஈரானிய வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள், எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்கூட்டியே போட்டி அமைப்பாளர்கள் கேட் மிடில்டனுக்கு அறிவுறுத்தியிருந்ததால் அவர் ஏமாற்றமடையவில்லையாம்.
லண்டனில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெட் டேவிஸ் தங்கத்தையும், ஈரான் வீரர் மெஹராத் வெள்ளியையும், சீன வீரர் லெஷாங் வாங் வெண்கலத்தையும் வென்றனர்.
பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார். முதலில் வெண்கலப் பதக்கத்தைக் கொடுத்த அவர் சீன வீரருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அடுத்து ஈரான் வீரரிடம் வந்தார். அப்போது கேட் மிடில்டனுக்கு ஈரான் வீரர் மெஹராத் கை குலுக்கவில்லை. மாறாக கைகளைத் தட்டியபடி நின்றார். மேலும் கைகளை தனது மார்புக்கு அருகே வைத்தபடி, இளவரசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் லேசாக குணிந்தபடி நின்றார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை சிரித்தபடி அணிவித்தார் கேட்.
ஈரான் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக தொட்டுக் கொல்லக் கூடாது என்பதால், கேட் மிடில்டனுக்கு மெஹராத் கை குலுக்கவில்லையாம். மேலும் இந்த பழக்க வழக்கம் குறித்து ஏற்கனவே கேட் மிடில்டனுக்கு கூறப்பட்டிருந்ததால் அவரும் கை கொடுக்கவில்லை.
மெஹராத் மட்டுமல்ல, போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிற இஸ்லாமிய வீரர்களும் கூட தங்களுக்குப் பரிசு வழங்குவது பெண்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை குலுக்குவதில்லை. அதேபோல வெளியிடங்களிலும் கூட பெண்களிடம் சற்று டிஸ்டன்ஸ் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.