11 ஆகஸ்ட் 2011
ஆபாசமான உடை சேலைதான் - ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கதையும், கேரக்டரும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகள் அணியைச் சேர்ந்தவர். இதன் காரணமாக எப்போதாவதுதான் அவரை திரையில் பார்க்க முடிகிறது. அதேநேரம் அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். ஆண்ட்ரியாவின் முதல் விருப்பம் இசை... பாடுவது.
காக்க காக்க படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் என்னை பாட வைத்தார். சினிமாவுக்காக நான் பாடியது அதுதான் முதல்முறை. அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம், பச்சைக்கிளி முத்துச்சரத்தில் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
ஆண்ட்ரியா தமிழில் தொடர்ந்து பாடுகிறார். தெலுங்கிலும் அவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.
தெலுங்கில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஜாரா... ஜாரா... பாடல்தான் முதலில் பாடினேன். பாடல் ஹிட். ஆனால் தமிழைப் போல் தெலுங்கில் தொடர்ச்சியாக பாட வாய்ப்புகள் ஏனோ வரவில்லை.
ஆண்ட்ரியா என்ற பெயர் இவர் மும்பையைச் சேர்ந்தவரா என்ற எண்ணத்தை தரும். பலரும் அப்படிதான் நினைக்கிறார்கள். ஆனால் ஆண்ட்ரியா படித்தது சென்னை என்பது ஆச்சரியமான விஷயம்.
நான் சென்னை கிறிஸ்டியன் காலேஜில்தான் என்னுடைய கிராஜுவேட்டை கம்ப்ளீட் செய்தேன். பிறகு மாடலிங்... விளம்பரங்கள். தென்னிந்தியாவின் முதல் பெண் மிரண்டா மாடல் நான்தான்.
ஆண்ட்ரியாவும், சர்ச்சையும் அக்கா, தங்கை. செல்வராகவன் படத்திலிருந்து திடீரென விலகியது, தன்னை படம் எடுத்த புகைப்படக்காரரை படம் எடுக்காதே என்று முறைத்தது என எப்போதும் சென்சேஷன்தான். அதனாலா தெரியவில்லை, சென்னையில் இருப்பதைவிட ஹைதராபாத்தில் தங்குவதையே அதிகம் விரும்புகிறார்.
ஹைதராபாத் எனக்குப் பிடித்த சிட்டி. அங்கு இருப்பதை விரும்புகிறேன். தெலுங்கு சினிமாவில்தான் அருந்ததி மாதிரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. அதனால் தெலுங்குப் படங்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும் எனக்கு எப்போதும் விருப்பமான இடம் என்றால் அது சென்னைதான்.
தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஆண்ட்ரியாவை அவ்வப்போதுதான் தமிழில் பார்க்க முடிகிறது. இனி எப்போது ஆண்ட்ரியாவை தமிழில் பார்க்கலாம்?
மங்காத்தாவில் அஜீத்துடன் நடித்திருக்கிறேன். அதுவொரு நல்ல அனுபவம். ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடந்தது. வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கேன்.
நடிகை என்றதும் அடுத்து வரும் கேள்வி, கிளாமர். ஹோம்லியாக அறிமுகமாகி ஹோம்லியாகவே - ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து - வளைய வருகிறார் ஆண்ட்ரியா. கிளாமர் ரோலில் அவரை பார்க்க முடியுமா?
ஒய் நாட்? கிளாமராக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? முழுதாக சேலை கட்டியிருந்தாலும் கூட ஆபாசமாக காட்ட முடியும். குறைவான ஆடையிலும் நாகரிகமாக காண்பிக்க இயலும். கிளாமர் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.
நடிப்பு, பாட்டு என்று இரு ட்ராக்கில் பயணிக்கிறார் ஆண்ட்ரியா. மேடைகளில் பாடும் போது அவர் காட்டும் ஈடுபாடு அசர வைக்கிறது. நடிப்பு, இசை... அவரது முதல் சாய்ஸ்...?
இசைதான் பர்ஸ்ட், நடிப்பு அதற்குப் பிறகுதான்.
ஆண்ட்ரியாவின் சினிமா ரோல் மாடல்கள்...?
எனக்கு ஆண்ட்ரி ஹெப்பர்ன், கேட் வின்ஸ்லெட் இருவரையும் ரொம்பப் பிடிக்கும். இவர்களை என்னுடைய ரோல் மாடல்கள் என்று சொல்லலாம்.