பேர்மிங்ஹாமில் கார் மோதியதில் மூன்று ஆண்கள் இன்று காலை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரில் இருவர் 25, 21 வயதுடைய சகோதரகள். மற்றையவர் இவர்களின் நண்பர். அதிவேகமாக வந்த இரு கார்கள் மூவரையும் மோதிச் சென்றதாக இறந்த சகோதரர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். “இவர்கள் வீதியில் இருக்கவில்லை அல்லது வீதியை மறித்துக் கொண்டிருக்கவில்லை. இவர்களை நோக்கி வந்து கார் மோதியது. கார் மோதியதில் மேலே தூக்கி எறிப்பட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரவு இடம்பெற்ற கலவரத்தில் இருந்து தமது கார் கழுவும் தொழிலை பாதுகாக்க தெருக்களில் இருந்துள்ளனர் எனவும் அதன்பின்னரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் என உறவினர் கூறியுள்ளார். பொலிஸார் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், விசாரணைகளில் இருந்து தெரியவருவது என்னவென்றால் காலை நேரத்தில் இந்த தெருவில் சண்டை நடந்துள்ளது. மற்றும் மூவரையும் காரை ஓட்டி வந்த ஒருவரே மோதியுள்ளார்” என்றனர். இச்சம்பவம் முந்தைய கலவரத்துடன் தொடர்புடையதா எனக்கூறுவது கடினமாக உள்ளது. ஆனால் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கலகக்காரர்களிடம் இருந்து தமது உடைமையை பாதுகாக்க இவர்கள் சண்டையிட்டுள்ளதாகவும், அதன்பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை விசாரணையை வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரையும் குறித்த காரையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை ஆராய்ந்து வருவதாகவும் கூறினர். விபத்துக்குள்ளாகி மூவரும் அடிபட்டுக் கிடந்த போது அங்கு சுமார் 80 பேர் கூடியிருந்ததாக அம்புலன்ஸ் சேவை பேச்சாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் முன்வந்து தகவல்களை வழங்கும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.