டாடா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்போகும் நானோ காருக்கு இப்போதே இஎம்ஐ செலுத்தச் சொல்வதால், பல வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா நிறுவனத்திடம் நானோ கார் கேட்டு சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் முதல் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒதுக்கீடு பெறாதவர்களில் சுமார் 55 ஆயிரம் பேர், அடுத்த ஒதுக்கீடு வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் செலுத்தியுள்ள முன்பணத்துக்கு 8.75 சதவீத வட்டி தருவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒதுக்கீடு பெற்றுள்ளவர்களுக்கு 2011ல் தான் டெலிவரி கிடைக்கும். எனினும், வங்கிகள் மூலம் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் மாதாந்திர தவணை (இஎம்ஐ) கடந்த மாதத்திலிருந்தே தொடங்குவதாக டாடா கூறி உள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தங்களது ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதுவரை 2,475 கார்கள் வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்து என டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.