
20 ஜூலை 2009
"குமரன்- ரஜினி ரசிகன்"!
புஜ்ஜிகாடு- மேட் இன் சென்னை' என்று கடந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படம் வெளியானது. ரஜினிதான் இந்தப் படத்தின் ஆடியோவை வெளியிட்டார், அதுவும் சென்னையில்.
ஒரு தெலுங்குப் படத்தின் ஆடியோ தமிழகத்தில் வெளியாகக் காரணம் என்ன?.
"இதில் படத்தின் நாயகன் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ரஜினி ரசிகன்தான் படத்தின் பிரதான பாத்திரம் எனும்போது, படத்தின் ஆடியோவை ரஜினி இருக்கும் தலைநகர் சென்னையில் வைப்பதுதானே முறை... அதனால்தான் இங்கு வைத்தோம். இன்னொன்று படத்தின் நாயகன் மட்டுமல்ல, படத்தை உருவாக்கிய நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான்", என்று பதிலளித்தார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.
இந்தப் படம் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் பெரும் தோல்வியடைந்தது. இப்போது அதை அப்படியே தமிழில் "குமரன்- ரஜினி ரசிகன்" என டப் செய்து வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினியின் மெகா ஹிட் படங்களான பாட்ஷா மற்றும் படையப்பாவிலிருந்து அதிரடி காட்சிகளை சேர்த்து வெளியிட்டிருந்தனர்.
படத்தைப் பார்த்த பிரபல பாடகர் மனோ, அதன் தமிழ் உரிமையை வாங்கி, எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடுகிறார்.
பிரபாஸ், த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மோகன்பாபு.
