
நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக ஒரு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகிறார்.
அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ்த் திரையுலகில் ரஜினி - கமல் என முதல்நிலை நாயகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்து பல ஆண்டுகள் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்தவர் ராதா.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்ந்தார். என்பதுகளில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார்.
இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு, குடும்பப் பெண்ணாக மாறிய ராதா, தன் மூத்த மகளுக்கு கார்த்திகா எனப் பெயர் சூட்டி, நடனத்தில் சிறந்தவராக மாற்றினார். சமீபத்தில் அவரது நடனம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றது. மகளுடன் சேர்ந்து ராதாவும் நடனமாடினார்.
அடுத்து இப்போது மகளையும் நாயகியாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ராதா. நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஜோடியாக ஜோஷ் எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கூட கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. இதில் ராதா, அம்பிகா மற்றும் கார்த்திகா பங்கேற்றனர்.
தன் மகள் அறிமுகமாவது குறித்து நடிகை ராதா கூறியதாவது:
"என் மகளை தமிழில் அறிமுகப்படுத்த நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டார்கள். உடனே ஒப்புக் கொண்டேன். நாக சைதன்யாவின் தாத்தா மற்றும் அப்பாவுடன் நான் நடித்துள்ளேன். இப்போது என் மகள் அந்தக் குடும்பத்தின் வாரிசுடன் நடித்துள்ளது பெருமையாக உள்ளது. தமிழிலும் விரைவில் நடிப்பாள் கார்த்திகா," என்றார் ராதா.
படங்களில் நடிப்பது, நடனம் இரண்டுமே தனக்கு விருப்பமான விஷயங்கள் என தெரிவித்தார் கார்த்திகா.