கியிவ்: யூரோ கோப்பை தொடரில் மீண்டும் கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்கள் தங்களை "சூப்பர் ஹீரோ'க்களாக அடையாளம் காட்டினர். விறுவிறுப்பான பைனலில் இத்தாலியை புரட்டி எடுத்த ஸ்பெயின் அணி, கோல் மழை பொழிந்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து இரு முறை யூரோ கோப்பை வென்ற முதல் அணி என்ற வரலாறு படைத்தது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைனில் நடந்தது. தொடரை நடத்திய போலந்து, உக்ரைன் அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின. இங்கிலாந்து, கிரீஸ், செக் குடியரசு, பிரான்ஸ் போன்ற அணிகள் காலிறுதியில் வெளியேறின. போர்ச்சுகல், பலம் வாய்ந்த ஜெர்மனி அணிகள் அரையிறுதியுடன் நாடு திரும்பின.
ஸ்பெயின் சாம்பியன்:
பைனலில் "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. 14வது நிமிடத்தில் பேப்ரிகாசிடம் இருந்து பந்தை வாங்கிய டேவிட் சில்வா, தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் ஜோர்டி ஆல்பா, மின்னல் வேகத்தில் ஓடி வந்து தனி ஆளாக கோல் அடித்தார்.
முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற ஸ்பெயின், இரண்டாவது பாதியிலும் மிரட்டியது. பெர்னாண்டோ டோரஸ், 84வது நிமிடத்தில் "சூப்பர்' கோல் அடிக்க, ஸ்பெயின் வெற்றி உறுதியானது. பின் ஜுவான் மேட்டா (88வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று, யூரோ கோப்பையை தட்டிச் சென்றது.
சாதனை அணி:
கடந்த 2008ல் கோப்பை வென்ற இந்த அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாதித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில், ஒரு அணி அடுத்தடுத்து கோப்பை வெல்வது இதுவே முதன் முறை. தவிர, மூன்று பெரிய தொடர்களில் (2008 யூரோ, 2010 உலக கோப்பை, 2012 யூரோ) தொடர்ந்து கோப்பை வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்தது.
பிரதமர் பாராட்டு
கோப்பை வென்றது அணியை பாராட்டிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறுகையில்,"" வியன்னா (2008), தென் ஆப்ரிக்கா (2010) தற்போது கியிவ் என, மூன்று தொடர்களில் ஸ்பெயின் சாம்பியன் ஆன போதும் நான் உடன் இருந்தேன். இது அற்புதமானது. இந்த வெற்றியால் பல லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள் மகிழ்ச்சியடைவர். இதற்கு அணி வீரர்கள், பயிற்சியாளருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்,'' என்றார்.
குறைந்த கோல்:
இத்தொடரில் மொத்தம் நடந்த 33 போட்டிகளில் 76 கோல்கள் தான் அடிக்கப்பட்டன. அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 2.45 கோல்கள் விழுந்தன. இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்த அளவாகும். ஏனெனில், 2004, 2008ல் 77 கோல்கள் (சராசரி 2.48), 2000ல் 85 (சராசரி 2.74) கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறை
இத்தாலிக்கு எதிரான "யூரோ' கோப்பை பைனலில் அசத்திய ஸ்பெயின் அணி, மூன்றாவது முறையாக (1964, 2008, 2012) சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை ஜெர்மனி (1972, 1980, 1996) அணியுடன் பகிர்ந்து கொண்டது. இவ்விரு அணிகள் தலா மூன்று முறை கோப்பை வென்றன.
* ஜெர்மனி அணி ஆறு முறை பைனலுக்கு முன்னேறியது. மூன்று முறை (1976, 1992, 2008) இரண்டாவது இடம் பிடித்தது. நான்கு முறை பைனலுக்கு தகுதி பெற்ற ஸ்பெயின் அணி, ஒரு முறை மட்டும் (1984) இரண்டாவது இடம் பிடித்தது.
* "யூரோ' கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை (2008, 2012) வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்தது ஸ்பெயின்.
சாதனை வெற்றி
ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இதன்மூலம் "யூரோ' கோப்பை பைனல் வரலாற்றில் அதிக கோல் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற புதிய சாதனை படைத்தது. முன்னதாக 1972ல் பெல்ஜியத்தில் நடந்த தொடரில் மேற்கு ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியன் அணியை தோற்கடித்தது.
டோரசுக்கு "கோல்டன் பூட்'
இத்தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் பெர்ணான்டோ டோரஸ் (ஸ்பெயின்), மரியோ கோமஸ் (ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), மரியோ பலோடெலி (இத்தாலி), மரியோ மேன்ஜூகிச் (குரோஷியா), ஆலன் ஜகோயவ் (ரஷ்யா) ஆகியோர் தலா 3 கோல் அடித்து முன்னிலை வகித்தனர்.
ஆனால் ஸ்பெயின் வீரர் டோரசுக்கு "கோல்டன் பூட்' விருது வழங்கப்பட்டது. இதற்கு இவர், ஐந்து போட்டியில் 189 நிமிடங்கள் மட்டும் விளையாடி மூன்று கோல் அடித்தார். அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இரண்டு கோல் அடித்த டோரஸ், இத்தாலிக்கு எதிரான பைனலில் ஒரு கோல் அடித்தார். தவிர இவர், இத்தாலிக்கு எதிரான பைனலில் சக வீரர் ஜுவான் மேட்டா கோல் அடிக்க உதவினார். இதன் அடிப்படையில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
"சிறந்த வீரர்' இனியஸ்டா
சிறந்த வீரருக்கான விருது ஸ்பெயினின் இனியஸ்டாவுக்கு வழங்கப்பட்டது. இத்தொடரில் இவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்றாலும், சகவீரர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சகவீரர் ஜீசஸ் நவாஸ் கோல் அடிக்க உதவி செய்துள்ளார். இத்தாலிக்கு எதிரான பைனலிலும் முதல் கோல் அடிக்க கைகொடுத்துள்ளார். பைனலில் சகவீரர் பேப்ரிகாசுக்கு பந்தை "பாஸ்' செய்தார். இதனை அப்படியே பேப்ரிகாஸ் தூக்கி அடிக்க, டேவிட் சில்வா தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். இத்தொடரில் இவரது ஒட்டுமொத்த செயல்பாடு சிறப்பாக இருந்ததால், இவ்விருது வழங்கப்பட்டது.
யூரோ "ரவுண்டு அப்'
"யூரோ' கோப்பை தொடரில் லீக் சுற்று (24 போட்டி), காலிறுதி (4), அரையிறுதி (2), பைனல் (1) உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 76 கோல் அடிக்கப்பட்டது.
* அதிகபட்சமாக ஆறு வீரர்கள் தலா மூன்று கோல் அடித்தனர். பத்து வீரர்கள் தலா 2 கோல் அடித்தனர். 37 வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
* சுவீடன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் கிளின் ஜான்சன் "சேம் சைடு' கோல் அடித்தார். இது, இத்தொடரில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு "சேம் சைடு' கோல்.
* பைனல் வரை சென்ற ஸ்பெயின் அணி அதிகபட்சமாக 12 கோல் அடித்தது. அயர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல் அடித்தது. இதன்மூலம் இத்தொடரில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
* லீக் சுற்றோடு வெளியேறிய அயர்லாந்து அணி குறைந்தபட்சமாக ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது. குரோஷியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்த போதும், இப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
* இத்தொடரில் ஒரு வீரர் கூட "ஹாட்ரிக்' கோல் அடிக்கவில்லை. ஒன்பது வீரர்கள் அதிகபட்சமாக ஒரு போட்டியில் தலா 2 கோல் அடித்தனர்.
* மொத்தம் 4 "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் மூன்று வாய்ப்பை கோலாக மாற்றினர். ஒரு வாய்ப்பு நழுவியது.
* ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் அதிகபட்சமாக தலா 4 வெற்றியை பெற்றன. இதில் ஜெர்மனி அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பதிவு செய்தது.
* நெதர்லாந்து, போலந்து, அயர்லாந்து அணிகள் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் தலா மூன்று லீக் போட்டியிலும் தோல்வி அடைந்தன. போலந்து அணி இரண்டு "டிரா', ஒரு தோல்வியை பெற்றது.
* அதிகபட்சமாக இத்தாலி அணி, மூன்று போட்டியை "டிரா' செய்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி "டிரா'வில் முடிந்த போதும், "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இத்தாலி வெற்றி பெற்றது.
* வீரர்கள் செய்யும் தவறுக்காக மொத்தம் 123 "மஞ்சள்' நிற அட்டை வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தவறு செய்ததால், மூன்று வீரர்களுக்கு மட்டும் "சிகப்பு' நிற அட்டை காட்டப்பட்டு, வெளியேற்றப்பட்டனர்.
* அதிகபட்சமாக இத்தாலி வீரர்களுக்கு 16 முறை "மஞ்சள்' நிற அட்டை காண்பிக்கப்பட்டது. டென்மார்க், ஜெர்மனி வீரர்களுக்கு குறைந்தபட்சமாக தலா 4 முறை "மஞ்சள்' நிற அட்டை காட்டப்பட்டது.
* போர்ச்சுகல்-ஸ்பெயின் அணிக்கு எதிரான அரையிறுதியில் அதிகபட்சமாக 9 முறை "மஞ்சள்' நிற அட்டை காட்டப்பட்டது. ரஷ்யா-செக்குடியரசு, டென்மார்க்-ஜெர்மனி அணிகள் மோதிய போட்டியின் போது, ஒரு "மஞ்சள்' அட்டை கூட காட்டப்படவில்லை