சீறிலங்கா இராணுவத்துக்கு சிங்களப் பெண்மணி ஒருவர்தான் தளபதியாக இருக்கின்றரா என்ற கேள்வியை இராணுவ அதிகாரிகளும், படையினரும் எழுப்புவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத் தளபதி லெட். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மனைவி மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் தவறான நடத்தையின் காரணமாகவே இவ்வாறான பிரச்சினை ஒன்று இராணுவ வட்டாரங்களில் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சேவா வனிதா என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளுக்காக இராணுவ முகாம்களுக்கு இவர் விஜயம் செய்யும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட முகாம்களின் தளபதிகள், பிரதித் தளபதிகள் மட்டுமன்றி அவர்களுடைய மனைவிமார்களும் அங்கு சமூகமளித்து தன்னை வரவேற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளாராம். இந்த உத்தரவுக்கு கீழ்படியத் தவறுபவர்கள் மறுநாள் கட்டாய லீவில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இராணுவத் தளபதிக்கு அவர் கடுமையான வார்த்தைகளில் உத்தரவிடுவதை இராணுவ அதிகாரிகள் பலர் நேரில் பார்த்துள்ளார்கள். மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பவர்கள் உடனடியாகவே தண்டனைக்கு அல்லது இடமாற்றத்துக்கு உள்ளாவதால், இராணுவத் தளபதியை விட அவரது மனைவியைச் சமாளிப்பதிலேயே இராணுவத் தளபதிகள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இராணுவத்தின் சேவா வணிதா பிரிவு இராணுவ முகாம்கள் பலவற்றிலும் ஆரம்பப் பாடசாலைகளை நடத்திவருகின்றது. பொதுமக்களிடமிருந்து இதற்காக ஒரு தவணைக்கு 1,500 ரூபாவும், படையினரது பிள்ளைகளுக்காக 600 ரூபாவும் அறவிடப்படுகின்ற போதிலும், இதற்கும் மேலாக வேறு காரணங்களைக் காட்டி பெருமளவு பணம் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ முகாம்களில் உள்ள சிறுவர் பாடசாலைகளுக்கு இவர் விஜயம் செய்யும் போது ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் வழங்கப்படுவதைப் போல செல்வந்த உணவு வகைகளே அவருக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதற்கான செலவீனத்தை குறிப்பிட்ட முகாம்களின் இராணுவத்தினரே பொறுப்பேற்க வேண்டும். உணவு விடயத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் அவர், குறிப்பிட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதற்கம் தயங்குவதில்லை எனக் கூறப்படுகின்றது.