ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மூன்று, "ஹேங் மேன்' கள் வேலூர் வருகின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக தூக்கு மேடை சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கு போடுவதற்கு, வேலூர் சிறையில் இருந்து, ஆறு வார்டன்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில்,"ஹேங் மேன்' கள் இருக்கின்றார்களா என, வேலூர் சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஸ்வரலு என்ற,"ஹேங் மேன்' இருப்பது தெரிந்தது.
இதையடுத்து,வேலூர் சிறை அதிகாரிகள் ஆந்திர மாநில சிறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, "ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட வெங்கடேஸ்வரலு வருவாரா?' என விசாரித்தனர். "இப்போது வெங்கடேஸ்வரலுவுக்கு வயது 85. சர்க்கரை நோய், இதய நோயால் அவதிப்பட்டு வருகின்றார் என்பதால் அவரால் வர முடியாது' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஹைதராபாத் சிறையில் வெங்கடேஸ்வரலு வேலை பார்த்த போது குப்தா என்பவர் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். வெங்கடேஸ்வரலுக்கு பின் குப்தா தான் தூக்கு போட்டு வந்தார். தற்போது, குப்தா, விஜயவாடாவில் இருப்பதாகவும், அவரிடம் சொன்னால் வந்து தூக்கு போட்டு விடுவார் என்றும் விவரம் தெரிந்தது.
வேலூர் சிறைத்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆந்திர மாநில சிறைத்துறையினர் விஜயவாடாவில் உள்ள குப்தாவிடம் தொடர்பு கொண்டனர். குப்தாவுக்கு வயது 60. இரு பெண்டாட்டிக்காரரான அவர் நல்ல திடகாத்திரமாக இருக்கின்றார்.குப்தாவுக்கு, 26 பேரை தூக்கில் போட்ட அனுபவம் உள்ளது. மேலும் குப்தாவிடம் வேலை செய்த பரதன், ஸ்ரீ ராம கிருஷ்ணன் ஆகியோர் தற்போது கர்நாடக மாநிலத்தில் இருப்பதாகவும், அவர்களும் தூக்கு போடுவதில், "எக்ஸ்பர்ட்' என்றும் தெரிந்தது. குப்தா கொடுத்த தகவலை அடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் பரதன், தவன்கெரேவில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஆகியோரும் வருகின்றனர். தற்போது வேலூர் சிறைத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவல்கள் படி, மூன்று பேரில் இருவரை அழைத்து வந்து ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட சிறைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இன்னும் சில தினங்களில் இவர்கள் மூவரும் வேலூர் சிறைக்கு வருகின்றனர்.
இது குறித்து வேலூர் சிறை அதிகாரிகள் கூறியதாவது:மிகவும் முக்கியமான ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரையும் தூக்கில் போடுவது சாமானிய விஷயமல்ல. "ஹேங் மேன்' களை கொண்டு தண்டனையை நிறைவேற்றும்படியும்,"ஹேங் மேன்' கள் கிடைக்காத பட்சத்தில் சிறை சாலை விதிகளின் படி, வார்டன்களைக் கொண்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மூன்று ஹேங் மேன்கள் கிடைத்துள்ளனர் என்றனர்.
பிரிட்டிஷ்காரர்கள்எழுதிய புத்தகம்:அந்தக் காலத்தில் ஒருவரை தூக்கில் போட, "ஹேங் மேன்' களுக்கு தலா ஒரு ரூபாய் கொடுத்தனர். பின் படிப்படியாக உயர்ந்து, 5 ரூபாய்க்கு வந்தது. இப்போது ஒருவருக்கு, 100 ரூபாய் கொடுக்கப்படுகின்றது. ஒருவரை தூக்கில் போடுவதற்கு என, "தூக்கு தண்டனையும் அதை நிறைவேற்றும் வழி முறையும்' என்ற ஆங்கில புத்தகம், எல்லா சிறைகளிலும் உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் எழுதிய இந்த புத்தகத்தில் உள்ள வழிமுறைகள் படிதான் இன்றளவும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.