18 ஜூலை 2009
வக்கீல்களை கிண்லடித்த சிவகாசி படம்- மன்னிப்பு கேட்கிறார் விஜய்
சென்னை: சிவகாசி படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்காக நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு மற்றும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால் ஏற்றுக் கொள்வோம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரச்சினையை முடிக்க, விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.
பட அதிபர் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் நடித்தனர்.
2005-ம் ஆண்டு தீபாவளிக்கு ந்த படம் வெளிவந்தது.
படத்தில் வக்கீல் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார். அவர் வருகிற காட்சிகள் வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வக்கீல்களை தாக்கும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் ஆகவே 13 கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பட அதிபர் ரத்னம், நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
விஜய் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனும் ஆஜர் ஆகி வாதாடினார்கள்.
சிவகாசி படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்கள் அவதூறு என்ற பிரிவில் வராது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, என்று விஜய்யின் வக்கீல் பீமன் வாதாடினார்.
ஆனால் பிரபாகரன் இதை மறுத்தார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படவில்லை. வர்த்தகத்துக்காக மலிவான காமெடிக்கு வக்கீல்களை இழுத்துள்ளனர்.
ஆகவே இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 499, 500 பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டு ரத்து செய்யக்கூடாது. ஏற்கனவே ஒரு புகைப்படத்தை விமர்சனம் செய்ததற்கே அவதூறு என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது, என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று பிரபாகரனிடம் கேட்டார்.
"பட அதிபர் ரத்னம், இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் ஆகிய மூன்று பேரும் கோர்ட்டுக்கு வந்து எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தால் அதை இக்கோர்ட்டு பரிசீலித்து எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு கோர்ட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்...", என்று பதிலளித்தார் பிரபாகரன்.
பின்னர் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், விஜய்யை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைக்குமாறு ஏஎம் ரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீதிபதியே இந்த யோசனையைத் தெரிவித்திருப்பதால், விஜய் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே அடுத்த விசாரணையின்போது விஜய் மன்னிப்புக் கேட்பார் எனத் தெரிகிறது.