
15 ஜூலை 2009
காயத்ரி ரகுராமின் நடனப் பள்ளி!
நடிகை காயத்ரி ரகுராம் இப்போது புதிதாக நடனப்பள்ளி ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்தப் பள்ளியைத் துவக்கி வைத்து வாழ்த்தினார் கலைஞானி கமல்ஹாசன்.
நடிகர்கள் பிரபுதேவா உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர்.
விசில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குநர் ரகுராமின் மகள் இவர். சார்லி சாப்ளின், பரசுராம், ஸ்டைல், விகடன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இப்போது நடன இயக்குநராக மாறியுள்ளார் காயத்ரி.
விக்ரம் நடித்துள்ள 'கந்தசாமி' படத்தில் இடம்பெற்றுள்ள 'எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி' என்ற பாடலுக்கு, இவர்தான் நடன இயக்குநர்.
காயத்ரி ரகுராம், சென்னை காம்தார் நகரில், 'நர்த்தனசாலா' என்ற பெயரில், ஒரு நடனப் பள்ளி துவங்கியுள்ளார். இந்த நடன பள்ளியில் பரத நாட்டியம், கதகளி, மற்றும் மேற்கத்திய நடனங்களை கற்றுத் தருகிறார் காயத்ரி.
இந்த நடன பள்ளியின் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி, நடனப் பள்ளியை தொடங்கி வைத்தார்கள். 2 பேரும் காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
"படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். அதே நேரம் நடன இயக்குநராக பணியாற்றுவதில்தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த நர்த்தனாசாலா ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு அமைப்பு. இங்கும் வெற்றி பெறும் என நம்புகிறேன்", என்றார் காயத்ரி ரகுராம்.
