சென்னை: மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . நாளை மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடும் நிலை வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மெளனமாக வானத்தை நோக்கி கையைக் காட்டியபடி சென்றார் ரஜினி.சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வந்தார்.அங்குள்ள வாக்குச் சாவடியில் ரஜினியும், செளந்தர்யாவும் வாக்களித்தனர்.பின்னர் வெளியில் வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். வழக்கம் போல யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் ஓட்டுப் போட வேண்டியது நமது கடமை.ஓட்டுப்போடுவதை யாரும் தவிர்க்கக் கூடாது. எல்லாரும் கண்டிப்பாக தங்கள் ஓட்டை போட வேண்டும் என்றார் ரஜினி.பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா என்று கேட்டனர். செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே. ஹா.. ஹா.. ஹா.. சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.