கடைசியில் அந்த சந்தோஷ வதந்தி உண்மையாகிவிட்டது. ஆம்... இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவும், வைரமுத்துவின் இளையமகன் கபிலனும் கரம் கோர்த்துவிட்டார்கள் திரையுலகில். அதுவும் இசைஞானியின் ஒப்புதலுடன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
யுவன் இசையில் முதல்முறையாக கபிலன் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதப் போகிறார்.
இசைஞானி இளையராஜாதான் வைரமுத்துவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தன் ஆதரவை வைரமுத்துவுக்கு பல ஆண்டுகாலம் வழங்கி வந்தார்.
இருவரும் இணைந்த படங்கள் அத்தனையிலும் இசை ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கடலோரக் கவிதைக்குப் பிறகு, இருவரும் பிரிந்துவிட்டனர். அன்று தொடங்கிய பிரிவு இருவருக்குமிடையே இந்த நிமிடம் வரை தொடர்கிறது.
பாரதிராஜா படத்தில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில், அது நடக்காமலே போய்விட்டது.
இந்த நிலையில்தான் தந்தைகளால் இயலாத ஒன்றை அவரது தனயன்கள் செய்திருக்கிறார்கள். இந்த இணைவுக்கு இசைஞானியே சம்மதம் தெரிவித்ததுதான் ஹைலைட்!
இந்தத் தொடக்கம், இசைஞானி - கவிப்பேரரசு கூட்டணிக்கு வழிவகுக்கட்டும்!