சென்னை: 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு, சினிமாவில் தீவிரமாகிவிட்டார் நயன்தாரா. கோடிகளில் சம்பளம். இன்றும் முதலிட அந்தஸ்து என அவர் செழிப்பாகவே உள்ளார்.
தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இப்போதுதான் முதல் முறையாகப் பங்கேற்கிறாராம் (இடையில் வந்தது ஷூட்டிங்குக்காக அல்ல!).
கடைசியாக தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திலும் தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்திலும் நடித்தார். அதன்பிறகு திருமணத்துக்கு தயாரானார்.

ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் அஜீத்துடன் நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டன.
சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பங்கேற்பது தனக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார் நயன்தாரா.
படப்பிடிப்பில் அனைவருடனும் சிரித்து சகஜமாக பேசி பழகிய அவர், தொடர்ந்து இரு வாரத்துக்கு சென்னையில் தங்கி தனது பகுதிகளை முடித்துத் தருகிறார்.