கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 சதங்களை அடித்து விளாசிய இந்திய வீரர் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க வைக்க, திட்டமிட வேண்டும் என்று இலங்கை துவக்க வீரர் தில்ஷன், தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் 1 டுவென்டி20 போட்டிலும் வெற்றி பெற்றது. இதனால் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணியினர் பெரும் வருத்தத்தில் உள்ளது.
இலங்கையில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி. ஒருநாள் தொடரில் 2 சதமடித்து அவர், டுவென்டி20 போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில், விராத் கோஹ்லியின் பார்மை கண்டு இலங்கை வீரர்கள் பயப்படுகின்றனர். இதனால் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய தகுந்த திட்டமிட வேண்டும் என்று இலங்கை அணியின் துவக்க வீரர் தில்ஷன், அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்ஷன் கூறியதாவது,
டுவென்டி20 உலக கோப்பையின் லீக் சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோத வாய்ப்பில்லை. ஆனால் சூப்பர் 8 அல்லது அதன்பிறகு வரும் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் இருந்து விராத் கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார். அதிக ரன்களை சேர்த்து வரும் அவர், தற்போது சிறப்பான பார்மில் உள்ளார். இளம்வீரர்களில் அவரை போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை. இதே பார்மில் அவர் தொடர்ந்து நீடித்தால், அவரை ஆட்டமிழக்க செய்வது கடினமாக செயல் போல ஆகிவிடும்.
எனவே விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய, தகுந்த திட்டமிட வேண்டியுள்ளது. இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய, நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அவரை எளிதில் அவுட்டாக்க முடியவில்லை.
ஒருநாள் போட்டியை விட டுவென்டி20 போட்டி வித்தியாசமானது. எனவே அதற்காக தயாராக வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சிறப்பாக ஆடி வரும் வீரர்களில் விராத் கோஹ்லியும் ஒருவர் என்றார்.