டெல்லி: இத்தனை போட்டிகளில் ஆடிய பிறகும், இப்போது கூட எனக்கு முதல் பந்தை சந்திப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக்.
97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி விட்டார் ஷேவாக். ஆனாலும் இன்னும் முதல் பந்தை சந்திக்கும்போது அவர் பயப்படுகிறாராம். முதல் பந்தை நினைத்தாலே அவரது வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலவும், நடுக்கமாகவும் உணர்வதாக அவர் கூறுகிறார்.
வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஒரு சில அசாதாரண பேட்ஸ்மேன்களில் ஷேவாக்கும் ஒருவர். ஆனால் அவரே இப்படிச் சொல்லியுள்ளது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் நான் கிரீஸுக்குப் போகும்போது முதல் பந்தை நினைத்து சற்றே பயப்படுகிறேன், நடுக்கமடைகிறேன். வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறப்பது போல உணர்கிறேன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் கடுமையாக போராடவும் செய்கிறேன்.
இப்படி நடுங்கினாலும் கூட முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்து பந்து வீச்சாளர்களிடம் எனது பயத்தை ஷிப்ட் செய்து விடவே நான் முயல்கிறேன். பல நேரங்களில் அப்படித்தான் நடக்கிறது. பயம் இருந்தாலும் கூட நம்பிக்கை அதை விட இரண்டு மடங்கு இருப்பதால் என்னால் முதல் பந்தை வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது என்றார் ஷேவாக்.
இவராவது பரவாயில்லை, பல பேர் கடைசிப் பந்து வரையும் கூட பயந்து கொண்டே விளையாடி சொதப்புகிறார்களே.. அவர்களுக்கு ஷேவாக் பரவாயில்லைதான்.