லண்டன்: உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சச்சின், <உசைன் போல்ட், ஜோகோவிச் ஆகியோரை பின்தள்ளி 31வது இடம் பிடித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருமானம் ரூ. 148 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு 78வது இடம் (ரூ. 104 கோடி) கிடைத்துள்ளது. இங்கிலாந்து கால்பந்து வீரர் ரூனே (37வது இடம், ரூ. 135 கோடி), செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (62வது இடம், ரூ. 115 கோடி), ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் (63வது இடம், ரூ. 113 கோடி) ஆகியோர் "டாப்-100' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் (ரூ. 475 கோடி), பிலிப்பினோ குத்துச்சண்டை வீரர் மான்னி பாக்குயோ (ரூ. 346 கோடி), அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 332 கோடி) ஆகியோர் "டாப்-3' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (5வது இடம், ரூ. 320 கோடி), இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் (8வது இடம், ரூ. 257 கோடி), போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (9வது இடம், ரூ. 237 கோடி) ஆகியோர் "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர்.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி (11வது இடம், ரூ. 218 கோடி), ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (26வது இடம், ரூ. 156 கோடி) ஆகியோர் "டாப்-50' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.